தேடுதல்

முன்முயற்சியின் ஏற்பாட்டுக் குழுவினரைச் சந்திக்கும் திருத்தந்தை முன்முயற்சியின் ஏற்பாட்டுக் குழுவினரைச் சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

உலகளாவிய நெருக்கடிகள் தொடர்ந்து குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன!

திருத்தந்தை தனது உரையில், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத் துறை உட்பட பல வத்திக்கான் அமைப்புகளின் ஆதரவைக் குறிப்பிட்டு, குழந்தைகளுக்கான உறுதியான செயல் திட்டங்களை உருவாக்கக் கேட்டுக்கொண்டார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"கடந்த ஓராண்டாக, உலகளவில் குழந்தைகளின் நிலைமை மேம்படவில்லை” என்றும் "அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு உறுதிமொழிகள் இருந்தபோதிலும் பலர் வறுமை, பாலியல் முறைகேடு, இடம்பெயர்வு மற்றும் கல்வியின்மையால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்" என்றும் எச்சரித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

“நெருக்கடியிலிருந்து கவனிப்பு வரை: குழந்தைகளுக்கான கத்தோலிக்க நடவடிக்கை” என்ற முன்முயற்சியின் ஏற்பாட்டுக் குழுவினரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு எச்சரிக்கை விடுத்த திருத்தந்தை, "கடந்த ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பன்னாட்டுக் குழந்தைகள் உரிமைகள் உச்சிமாநாட்டிலிருந்து முன்னேற்றம் தேக்கமடைந்துள்ளது ஆழ்ந்த கவலைக்குரியது" என்று குறிப்பிட்டார்.

"நமது உலகின் குழந்தைகளும் இளைஞர்களும் பெரும்பாலும் கவனிப்பு மற்றும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை அணுக முடியாமல் தவிக்கின்றனர்" என்று கூறிய திருத்தந்தை, ஆயிரக்கணக்கான குழந்தைகள் வலுக்குறைந்தவர்களாகவும், தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டவர்களாகவும் இருப்பதால், உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனவா என்று கேள்வி ஒன்றை எழுப்பினார்.

குடும்பத்தின் முக்கியத்துவம் பற்றி முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் படிப்பினைகள் குறித்து  நினைவு கூர்ந்த திருத்தந்தை, தாய் மற்றும் தந்தை இருவரிடமிருந்தும் அன்பைப் பெறுவதற்கான குழந்தையின் உரிமையை மீண்டும் உறுதிப்படுத்திதுடன், குடும்பங்கள் மற்றும் அன்னையர்களை ஆதரிப்பதற்குப் பதிலாக "உயிர்வாழ்க்கையைத் தடுக்கும்" கொள்கைகளுக்குப் பொது வளங்களை ஒதுக்குவதைக் குறித்து விமர்சித்தார்.

"முயற்சிகள் தோல்வியடைந்தாலும் கூட, குரலற்ற குழந்தைகளை ஆதரிப்பதில் கத்தோலிக்க அமைப்புகள் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்" என்று ஊக்குவித்த திருத்தந்தை, திருஅவை நிறுவனங்கள் முழுவதும் அதிகமான ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பராமரிப்புப் பகுதிகளில் கவனம் செலுத்துவதை விட, குழந்தைகளின் உடல், உளவியல் மற்றும் ஆன்மிக நலன் உள்ளிட்ட "குறுக்குவெட்டுத் தேவைகளை" (transversal needs) நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை.

ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத் துறை உட்பட பல வத்திக்கான் அமைப்புகளின் ஆதரவைக் குறிப்பிட்டு, குழந்தைகளுக்கான உறுதியான செயல் திட்டங்களை உருவாக்க கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

நட்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஓர் உலகத்திற்கான குழந்தைகளின் நம்பிக்கைகளை வெளிப்படுத்திய திருத்தந்தை, குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பவர்களுக்கு வலிமை கிடைக்க இறைவேண்டல் செய்து தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 பிப்ரவரி 2026, 12:46