ஒலிம்பிக் போர் நிறுத்தத்தின் பண்டைய மரபை மதிக்க அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“மிலானோ-கோர்டினா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் தொடங்கத் தயாராகி வரும் நிலையில், மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் ஒலிம்பிக் போர் நிறுத்தத்தின் பண்டைய மரபை மதிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் ஒன்றை விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
பிப்ரவரி 01, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இந்த வேண்டுகோளை விடுத்தார் திருத்தந்தை.
உடன்பிறந்த உறவையும் அமைதியான உலகத்திற்கான நம்பிக்கையையும் ஊக்குவிப்பதில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளின் பங்களிப்பை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "இதுதான் ஒலிம்பிக் போர் நிறுத்தத்தின் அர்த்தம்" என்றும் "இது விளையாட்டுகளை நடத்துவதோடு அதனுடன் இணைந்து வரும் மிகவும் பழமையான ஒரு வழக்கம்" என்றும் சுட்டிக்காட்டினார்.
"ஒலிம்பிக் போர் நிறுத்தம் கிமு 776-ஆம் ஆண்டு பண்டைய கிரேக்கத்தில் அமலுக்கு வந்தது" என்றும், "அப்போது போரிடும் நாடுகள் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னும் பின்னும் தங்கள் போர்நிறுத்தத்தைக் கடைபிடிக்கும்" என்றும் குறிப்பிட்டுக்காட்டினார் திருத்தந்தை.
"உலகத் தலைவர்களும், அமைதிக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பதட்டங்களைத் தணிக்க வேண்டும்" என்றும், உரையாடலைத் தொடங்கவும் உறுதியான செயல்களைச் செய்யவும் வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
ஒலிம்பிக்கிற்கு முந்தைய நிகழ்வுகளுக்கு முன்னதாக அனுப்பிய வாழ்த்துச் செய்திகளில், விளையாட்டு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நேர்மையான விளையாட்டு, மரியாதை, குழு மனப்பான்மை, தியாகம், சமூக உள்ளடக்கம் மற்றும் சந்திப்பின் மகிழ்ச்சி உள்ளிட்ட விளையாட்டின் முக்கிய மதிப்பீடுகளைத் தழுவிக்கொள்ள திருத்தந்தை ஊக்குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
