திருத்தந்தையின் நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை திருத்தந்தையின் நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை   (ANSA)

இயேசுவுடனான ஒன்றிப்பால் ஊட்டமும் ஞானமும் பெறுவோம்!

திருத்தந்தை தனது நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில், கிறிஸ்துவுடனான ஒன்றிப்பிலிருந்து வலிமையைப் பெற விசுவாசிகளை ஊக்குவித்ததுடன், இதன் வழியாக அவர்கள் அனைவரும் உலகில் அமைதியாக நம்பிக்கையின் அடையாளங்களாக மாறட்டும் என்று கூறினார்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“இயேசுவுடனான ஒன்றிப்பால் ஊட்டமும் ஞானமும் பெறுவோம்” என்றும், “பெருமை பேசாமல், ஒரு மலையின் மீதுள்ள நகரத்தைப் போல அனைவருக்கும் ஒளி தருவோம்” என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பிப்ரவரி 08, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.

இந்நாளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு குறித்த நற்செய்தி வாசகத்தை (காண்க. மத்   5: 13-16) மையமாகக் கொண்டு தனது சிந்தனைகளை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை

கிறிஸ்தவர்கள் இயேசு கூறிய அருள்பேறுகளை ஓர் உறுதியான வாழ்க்கை முறையாகக் கொண்டு வாழ அழைப்பு விடுத்த திருத்தந்தை, இரக்கம் மற்றும் நீதியின் நடைமுறைச் செயல்கள் மூலம் மண்ணுலகின் உப்பாகவும்  ஒளியாகவும் வாழுமாறு கேட்டுக்கொண்டார்.

"உண்மையான மகிழ்ச்சி பணிவு, சாந்தம், இதயத்தின் எளிமை மற்றும் நீதிக்கான தாகத்திலிருந்து வெளிப்படுகிறது" என்றும், "அத்தகைய மகிழ்ச்சி வாழ்க்கைக்கு இனிமையை அளிக்கிறது மற்றும் மறைந்திருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது" என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, “கிறிஸ்துவை எதிர்கொள்வது இரக்கம், அமைதி மற்றும் ஒப்புரவிற்கான பாதைகளைத் திறக்கிறது” என்றும் கூறினார்.

இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள் காட்டி, பசித்தோர்க்கு உணவைப் பகிர்ந்துகொடுப்பது, தங்க இடமில்லா வறியோரை இல்லங்களுக்கு வரவேற்பது, உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பது உள்ளிட்ட அநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மேலும் "இத்தகைய அடையாளங்கள், 'விடியலைப் போல வெளிச்சம் தோன்ற' அனுமதிக்கின்றன" என்றும், "காயமடைந்த இதயங்களுக்குக் குணமளிக்கின்றன" என்றும் விசுவாசிகளுக்கு சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

மகிழ்ச்சியையோ அல்லது நோக்கத்தையோ இழந்துவிட்டதாக உணர்பவர்களின் துன்பத்தை உவர்ப்பை இழந்த உப்பாக மாறும் நம்பிக்கைக்கு எதிராக எச்சரித்த திருத்தந்தை, "கடவுள் ஒருபோதும் யாரையும் கைவிடுவதில்லை" என்றும், "நற்செய்தியையும் அருள்பேறுகளின் செய்தியையும் ஏற்றுக்கொள்வதன் வழியாக  காயங்களைக் குணப்படுத்த முடியும்" என்றும் வலியுறுத்தினார்.

கிறிஸ்துவுடனான ஒன்றிப்பிலிருந்து வலிமையைப் பெற விசுவாசிகளை ஊக்குவித்த திருத்தந்தை, “இதன் வழியாக அவர்கள் அனைவரும் உலகில் அமைதியாக நம்பிக்கையின் அடையாளங்களாக மாறட்டும்” என்று உரைத்தார்.

இறுதியாக, அவர்களின் இந்தப் பணியை அன்னை கன்னி மரியாவின் பரிந்துரை இறைவேண்டலில் ஒப்படைத்த திருத்தந்தை, விசுவாசிகள் அனைவரும் மரியாவின்  மைந்தனாகிய இயேசுவின் உண்மையான சீடர்களாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து, அவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 பிப்ரவரி 2026, 12:45