2026-ஆம் ஆண்டிற்கான திருத்தந்தையின் தவக்காலச் செய்தி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் தவக்காலத்தை செவிசாய்த்தல், உண்மையான நோன்பு மற்றும் நீதிக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் காலமாக கடைபிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
பிப்ரவரி 13, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள இவ்வாண்டிற்கான தவகாலச் செய்தியில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, நவீன கால மனப்பதற்றங்கள் மற்றும் கவனச் சிதறல்களுக்கு மத்தியில் கடவுளை தங்கள் வாழ்க்கையின் மையத்தில் கொள்ளுமாறு விசுவாசிகளை வலியுறுத்தியுள்ளார்.
"செவிசாய்த்தல், நோன்பு: தவக்காலம் மனமாற்றத்தின் காலம்" என்ற தலைப்பில் தனது தவக்காலச் சிந்தனைகளை வழங்கியுள்ள திருத்தந்தை, "கடவுளுடைய வார்த்தைக்கு நம் இதயங்களைத் திறக்கும்போது மனமாற்றம் தொடங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏழைகளின் குரலுக்குச் செவிசாய்க்கும் கடவுள்
"விசுவாசிகள் திருவிவிலியத்திற்கும், ஏழைகள் அல்லது துயருறுவோரின் குரல்களுக்கும் கவனமுடன் செவிமடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, "கடவுள் தம்முடைய மக்கள் உதவிக்காகக் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது, அக்குரலுக்குச் செவிசாய்க்கும் ஒருவராக அவரைத் திருவிவிலியம் எடுத்துக்காட்டுகிறது" என்று நினைவூட்டியுள்ளார்.
கடவுளுக்கும் அடுத்திருப்போருக்கும் இடையிலான உறவின் அடித்தளமாக செவிமடுப்பதை விவரித்துள்ள திருத்தந்தை, "சமூகத்தில் ஏற்படும் அநீதியை உணர்ந்து அதற்குப் பதிலளிக்க கிறிஸ்தவர்களுக்கு திருமறைநூல் கற்பிக்கிறது" என்று மொழிந்துள்ளார்.
மேலும் ஏழைகளின் நிலை, தனிநபர்கள், அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் மற்றும் திருஅவைக்கே தொடர்ந்து சவாலாக உள்ளது என்பதை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
நோன்பு என்பது இதயத்தைத் தயார்படுத்துவது
அடுத்து நோன்பு குறித்து தனது சிந்தனைகளைத் திருப்பிய திருத்தந்தை, "இது கடவுளின் வார்த்தையைப் பெற இதயத்தைத் தயார்படுத்துவதற்கான ஓர் உறுதியான வழி" என்று விவரித்துள்ளார்.
“உணவைத் தவிர்ப்பதைத் தாண்டி, விசுவாசிகள் தங்கள் ஆழமான ஆசைகளை ஆராயவும், நீதிக்கான தாகத்தைப் புதுப்பிக்கவும், அற்ப நிறைவுடைமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும் நோன்பு உதவுகிறது” என்று கூறியுள்ள திருத்தந்தை, "உண்மையான நோன்பு என்பது, தற்பெருமையில் அல்ல, மாறாக, பணிவிலும் நம்பிக்கையிலும் வேரூன்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடைபிடிக்கவேண்டிய சுயக்கட்டுப்பாடுகள்
“தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தவிர்க்க வேண்டும்” என்றும், “கத்தோலிக்கர்கள் சமூக ஊடகங்களிலோ அல்லது பொது விவாதங்களிலோ கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ, தீர்ப்பளிக்க அவசரப்படவோ அல்லது அவதூறுகளைப் பரப்பவோ கூடாது. அதற்குப் பதிலாக இரக்கம், மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் பேச வேண்டும்” என்றும் ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை.
தவக்காலத்தின் சமூகப் பரிமாணம் குறித்து தனது செய்தியில் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, “பங்குத்தளங்கள், குடும்பங்கள் மற்றும் தலத் திருஅவைச் சமூகங்கள், செவிசாய்த்தல் மற்றும் நோன்பு, உரையாடல், மனந்திரும்புதல் மற்றும் ஒருமமைப்பாட்டை வளர்ப்பதன் வழியாக, பகிரப்பட்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று ஊக்குவித்துள்ளார்.
மனமாற்றம் என்பது நீதியின்மேல் நாட்டம்
“மனமாற்றம் என்பது தனிப்பட்ட மனசாட்சியை மட்டுமல்ல, உறவுகளின் தரத்தையும், நீதி மற்றும் ஒப்புரவிற்கான சமூகத்தின் நாட்டத்தையும் உள்ளடக்கியது” என்று தனது செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை.
இறுதியாக, தவக்காலம் கிறிஸ்தவர்கள் கடவுளிடமும், தேவையில் இருப்போரிடமும் அதிக கவனம் செலுத்தவும், 'அன்பின் நாகரிகத்தை' கட்டியெழுப்ப உதவவும் இறைவேண்டல் செய்து இவ்வாண்டிற்கான தனது தவகாலச் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
