கிறிஸ்தவச் செய்தியை மீண்டும் கண்டுபிடியுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 13, வெள்ளியன்று, வத்திக்கானில் பணியாற்றும், இத்தாலிய நாட்டின் தேசிய இராணுவக் காவல் படையினரின் சட்ட அமலாக்க அதிகாரிகளைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், கிறிஸ்தவத்தின் உண்மையான செய்தியை மீண்டும் கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
"நேர்மையான மனசாட்சியுடன்" கடமைகளைச் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை, நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கும் சமூகத்தில் தேசிய இராணுவப் காவல் படையினரின் பங்களிப்பிற்கும் இடையிலான ஒன்றிப்பினை எடுத்துக்காட்டினார்.
கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்தைப் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, நற்செய்தி, அமைதியான மாற்றத்தின் வழியாக இரக்கம், உடன்பிறந்த உறவு மற்றும் வாழ்க்கைக்கு மரியாதை போன்ற மதிப்பீடுகளை ஏற்படுத்தி, நாகரிகங்களை எவ்வாறு வடிவமைத்தது என்பதை எடுத்துரைத்தார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திலும் திருஅவையின் படிப்பினைகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளபடி, கிறிஸ்துவின் செய்தி காலத்தால் அழியாதது என்பதைக் குறிப்பிட்டு, இந்தக் கொள்கைகளைத் தங்கள் பணியில் வெளிப்படுத்துமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை, குறிப்பாக, வத்திக்கானையும் உரோமை நகரத்தையும் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இறுதியாக, அவர்கள் அனைவரையும் அன்னை கன்னி மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைத்து இறைவேண்டல் செய்ததுடன், அவர்களின் குடும்பங்களுக்கும் பணிக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
