அமைதி என்பது ஓர் அருள்கொடை மற்றும் வாக்குறுதி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"அரசியலில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உரையாடல், உள்ளடக்கம் (அனைவரையும் உள்ளடக்கிய) மற்றும் வலுக்குறைந்தவர்கள்மீதான அக்கறை மூலம் அமைதியைக் கட்டியெழுப்புவதில் தீவிரப் பங்காற்ற வேண்டும்" என்றும், "உலகளவில் அமைதியை அடைவதற்கு முன்பாக, அதனை வாழ்ந்துகாட்ட வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
"ஒரே மனிதநேயம், ஒரே கோள் " என்ற தலைப்பில் நிகழ்ந்த பன்னாட்டு மாநாடு ஒன்றின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த இளம் தலைவர்கள் போட்டியை விட ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுத்ததற்காக அவர்களைப் பாராட்டினார்.
சிக்கலான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு முக்கிய அணுகுமுறையாக ஒன்றிணைந்த பயணம் அல்லது பகிரப்பட்ட செவிமடுத்தல் மற்றும் தேர்ந்து தெளிதலை அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
சுற்றுச்சூழல், சமூக மற்றும் கலாச்சார அநீதிகளை நிவர்த்தி செய்வதன் அவசரத் தேவையை அவர்களிடத்தில் வலியுறுத்திய திருத்தந்தை, "ஏழைகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் வலுக்குறைந்தோர் விலக்கப்படும் சூழலில் நீடித்த அமைதி என்பது சாத்தியமற்றதாக மாறிவிடும்" என்று எச்சரித்தார்.
மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கான திருஅவையின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர்களிடம் உறுதிப்படுத்திய திருத்தந்தை, பரந்த அளவிலான பங்கேற்பு மற்றும் கூட்டொருமைப்பாட்டை ஊக்குவிக்கும் அரசியல் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார்.
உலகளாவிய சவால்களை துணிவுடன் எதிர்கொள்ள இளம் தலைவர்களை ஊக்குவித்தும், ஒரு பொதுவான இல்லமாக விளங்கும் இவ்வுலகிற்கு மனிதகுலத்தின் பகிரப்பட்ட பொறுப்பை வலியுறுத்தியும் தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
