நம்பிக்கை மற்றும் அமைதியின் இறைவாக்கினார்களாக இருங்கள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"அர்ப்பண வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டுள்ள இருபால் துறவியரும் நம்பிக்கை மற்றும் அமைதியின் இருவாக்கினார்களாக வாழ்வதற்கு அழைக்கப்படுகிறார்கள்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பிப்ரவரி 02, திங்கள்கிழமை, இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருவிழாவன்று, அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட துறவியரின் 30-வது உலக நாள் சிறப்பிக்கப்பட்ட வேளை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் இடம்பெற்ற திருப்பலியின் மறையுரையில் இத்தகைய அழைப்பொன்றை விடுத்தார் திருத்தந்தை.

அன்றைய நாள் வாசகமான லூக்கா நற்செய்தியை மைப்படுத்தி, சிமியோன், அன்னா மற்றும் குழந்தை இயேசுவுக்கு இடையேயான ஆழமான சந்திப்பைப் பற்றிப் பேசிய திருத்தந்தை, இறைவன் மற்றும் மனித அன்பின் சந்திப்பைக் குறித்து எடுத்துக்காட்டினார்.

இறைவாக்கினார்களாகத் திகழ்ந்திடுங்கள்

"அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட இருபால் துறவியரும், இறைவாக்கினார்களாக பங்களிக்க வேண்டிய தங்கள் பணியின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றும், "தாராள மனப்பான்மை, இறைவேண்டல் மற்றும் தியாகத்தின் வழியாக, கடவுளின் உடனிருப்பை அறிவிக்கவும், அவருக்கான வழியைத் தயாரிக்கவும் வேண்டும்" என்றும் அழைப்பு விடுத்தார்.

முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், படிப்பினைகளை எடுத்துக்காட்டி,  அர்ப்பண வாழ்க்கையின் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை குறித்து வலியுறுத்திய திருத்தந்தை, "அங்குத் துறவிகள் கிறிஸ்துவின் அன்பு மற்றும் இரக்கத்தால் இதயங்களைத் தூய்மைப்படுத்த அழைக்கப்படுகிறார்கள்" என்றும் எடுத்துரைத்தார்.

துறவு சபைகளை நிறுவிய இருபால் நிறுவுநர்களையும் பெருமைப்படுத்தியதுடன், அடிக்கடி பெரும் இழப்புகளைச் சந்தித்த நிலையிலும் கூட, ஒதுங்குத் துறவுமட மற்றும் அப்போஸ்தலிக்க அமைப்புகளில் அவர்களின் அயராதப் பணிகளைப் பாராட்டினார் திருத்தந்தை.

கடவுளின் மீட்கும் உடனிருப்பிற்குச் சான்று பகருங்கள்

பெருகிய முறையில் விசுவாசத்திலிருந்து விலகிச் செல்லும் உலகில், குறிப்பாக மிகவும் வலுக்குறைந்த நிலையில் இளைஞர், முதியவர், ஏழை, நோயாளர்கள் மற்றும் சிறைக்கைதிகளுக்கு பிறரன்புப் பணிகளை ஆற்றுவதன் வழியாக, "அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்டவர்கள், கடவுளின் மீட்கும் உடனிருப்பிற்குச் சான்றுபகர வேண்டும்" என்று ஊக்குவித்தார் திருத்தந்தை.

இம்மண்ணக வாழ்வுக்குரிய எதார்த்தங்களுக்கும் நிலைவாழ்விற்குமான நம்பிக்கைக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்புக்குச் சான்றுபகரும் அர்ப்பண வாழ்வின் புனிதத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார் திருத்தந்தை.

அமைதியின் கலங்கரை விளக்கங்களாகத் திகழுங்கள்

இறுதியாக, அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்டோரின் பணிகளை அன்னை கன்னி மரியாவின் பரிந்துரை இறைவேண்டலில் ஒப்படைத்த திருத்தந்தை, "உலகில் நம்பிக்கை மற்றும் அமைதியின் கலங்கரை விளக்கங்களாகத் தொடருங்கள்" என்று அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு தனது மறையுரைச் சிந்தனைகளை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 பிப்ரவரி 2026, 12:51