தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

ஒவ்வொரு யுகத்திலும், வரலாற்றில் மனுவுருவெடுத்து, இதயங்களைச் சென்றடையக்கூடிய மொழியில் கடவுளின் வார்த்தையைப் புதிதாக வழங்க திருஅவை அழைக்கப்படுகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 04, புதன்கிழமை, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. ‘இறை வெளிப்பாடு’ (Dei Verbum) குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தினுடைய ஆவணத்தின் தொடர்ச்சியாக, "திருமறைநூல் : மனித வார்த்தைகளில் கடவுளின் வார்த்தை" என்ற தலைப்பில் தனது சிந்தனைகளை இவ்வாரம் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. முதலில் திருத்தூதர் புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.

"நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது." (2 திமொ 3:14–16)

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

அண்மைய வாரங்களில் நாம் சிந்தித்து வரும் ‘இறை வெளிப்பாடு’ (Dei Verbum) குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஆவணம், திருஅவையின் வாழும் மரபில் படிக்கப்படும் மறைநூல், கடவுள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடம் தொடர்ந்து பேசுகிறார் என்றும், இதனால், அவருக்குச் செவிசாய்ப்பதன் மூலம், அவர்கள் அவரை அறிந்து அவரை அன்புகூர முடியும் என்று கற்பிக்கிறது.

இருப்பினும், திருவிவிலிய நூல்கள் மனித வலிமைக்கு அப்பாற்பட்ட மொழியில் எழுதப்படவில்லை. மாறாக மனித மொழியில் எழுதப்பட்டன. அன்றாட வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்தபடி, வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களால் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாது, உண்மையிலேயே தொடர்பு கொள்ளவோ ​​அல்லது உறவை உருவாக்கவோ முடியாது. சில வேளைகளில், உங்களை இன்னொருவர் புரிந்துகொள்ளச் செய்வது அன்பின் முதல் செயலாகும்.

இந்தக் காரணத்திற்காக, கடவுள் மனித மொழிகளைப் பயன்படுத்திப் பேசத் தேர்வு செய்கிறார், இதனால் வெவ்வேறு ஆசிரியர்கள் தூய ஆவியால் ஈர்க்கப்பட்டு, திருவிவிலியத்தின் நூல்களை இயற்றினர். ‘இறை வெளிப்பாடு’ ஆவணம் கூறுவதுபோன்று, "மனித மொழியில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தைகள் மனிதர் பேசுவதைப்போன்று ஆக்கப்பட்டுள்ளன. அதேபோல் என்றும் வாழும் இறைத்தந்தையின் வார்த்தை, அவர் மனித இயல்பின் பலவீனங்களை ஏற்றுக்கொண்டபோது, ​​மனிதரைப் போல ஆனது" (DV, 13). ஆகையால், மறைநூல் அதன் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, அதன் மொழியிலும், மனிதர்கள் மீது கடவுளின் பரிவிரக்கத்தையும், அவர்களிடம் நெருங்கி வருவதற்கான அவரது விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது. திருஅவையின் வரலாறு முழுவதும், புனித நூல்களின் தெய்வீக ஆசிரியருக்கும் (இறைவன்) மனித ஆசிரியர்களுக்கும் இடையிலான உறவு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, பல இறையியலாளர்கள் புனித நூலின் இறை ஏவுதலைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டிருந்தனர், மனித ஆசிரியர்களை தூய ஆவியின் செயலற்ற கருவிகளாக மட்டுமே கருதினர்.

அண்மைய காலங்களில், புனித நூல்களை எழுதுவதில் புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர்களின் (hagiographers) பங்களிப்பை  அக ஆய்வு (reflection) மறுபரிசீலனை செய்துள்ளது. இதன் விளைவாக, புனித நூலின் முக்கிய ஆசிரியர் கடவுள் என்றும், ஹாகியோகிராஃபர்கள் (hagiographers) கூட புனித நூல்களின் உண்மையான ஆசிரியர்கள்தாம் என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. கடந்த நூற்றாண்டின் ஒரு நுண்ணிய விளக்கவுரையாளர் குறிப்பிட்டது போல், "மனித செயல்பாட்டை ஓர் எளிய நகலெடுப்பவரின் செயலாகக் குறைப்பது இறை செயல்பாட்டை மகிமைப்படுத்துவதாகாது." கடவுள் ஒருபோதும் மனிதரையும் அவரது திறன்களையும் குறைப்பதில்லை!

அப்படியானால், மறைநூல் மனித வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தையாக இருந்தால், இரண்டு அம்சங்களையும் புறக்கணிக்கும் எந்தவொரு அணுகுமுறையும் முழுமையடையாது. புனித நூல்களின் சரியான விளக்கம், அவை முதிர்ச்சியடைந்த வரலாற்று சூழலையும், பயன்படுத்தப்பட்ட இலக்கிய வடிவங்களையும் புறக்கணிக்க முடியாது என்பதையே இது காட்டுகிறது; உண்மையில், கடவுள் பேசத் தேர்ந்தெடுத்த மனித வார்த்தைகளைப் படிப்பதைக் கைவிடுவது, அடிப்படைவாத அல்லது ஆன்மிகவாத மறைநூல் வாசிப்புகளுக்கு வழிவகுக்கும், அது அதன் அர்த்தத்தைக் காட்டிக் கொடுக்கும்.

இந்தக் கொள்கை கடவுளுடைய வார்த்தையின் அறிவிப்பிற்குப் பொருந்தும்: அது எதார்த்தத்துடனும், ஆண்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கைகள் மற்றும் துன்பங்களுடனும் தொடர்பை இழந்தால், அது புரிந்துகொள்ள முடியாத, மோசமான தொடர்பு அல்லது காலமற்ற மொழியைப் பயன்படுத்தினால், அது பயனற்றதாகிவிடும்.

ஒவ்வொரு யுகத்திலும், வரலாற்றில் மனுவுருவெடுத்து, இதயங்களைச் சென்றடையக்கூடிய மொழியில் கடவுளின் வார்த்தையைப் புதிதாக வழங்க திருஅவை அழைக்கப்படுகிறது. "நாம் மூலத்திற்குத் திரும்பிச் சென்று நற்செய்தியின் உண்மைப் (அசல்) புத்துணர்ச்சியை மீட்டெடுக்க முயலும் ஒவ்வொரு முறையும், புதிய பாதைகள் எழுகின்றன. படைப்பு முறைகள், பிற வெளிப்பாடு வடிவங்கள், மிகவும் சொற்பொழிவுமிக்க அடையாளங்கள், இன்றைய உலகிற்குப் புதுப்பிக்கப்பட்ட அர்த்தத்துடன் கூடிய வார்த்தைகள்" என்று முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதனை நமக்கு நினைவூட்டினார்.

மறுபுறம், அதே அளவு சுருக்கமானதாக, மறைநூலை வாசிப்பது, அதன் இறைத்தோற்றத்தைப் புறக்கணித்து, அதை வெறும் மனித போதனையாக, தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் படிக்க வேண்டிய ஒன்றாக அல்லது "கடந்த காலத்தின் ஒரு உரையாக" புரிந்துகொள்வதாகும். குறிப்பாக, வழிபாட்டு முறையின் சூழலில் அறிவிக்கப்படும்போது, ​​மறைநூல் இன்றைய விசுவாசிகளிடம் பேசவும், அவர்களின் தற்போதைய வாழ்க்கையை அவர்களின் சவால்களுடன் தொடவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும் விரும்புகிறது. ஒரு விசுவாசி புனித நூல்களைப் படித்து, அவற்றைத் தூண்டிய அதே ஆவியின் வழிகாட்டுதலின் கீழ் அவற்றை விளக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும் (DV, 12).

இந்த அர்த்தத்தில், புனித அகுஸ்தினார் நமக்கு நினைவூட்டுவது போல, விசுவாசிகளின் வாழ்க்கையையும் அன்பையும் வளர்க்க மறைநூல் உதவுகிறது: “தெய்வீக மறைநூலைப் புரிந்துகொண்டதாக நினைப்பவர், ஆனால் அத்தகைய புரிதலின் மூலம் கடவுள் மற்றும் அடுத்திருப்போரின் இந்த இரட்டை அன்பின் கட்டிடத்தை கட்டியெழுப்புவதில் வெற்றிபெறவில்லை, அவர் இன்னும் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லை.” திருமுழுக்குப் பெற்றவர்களின் சாட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட நற்செய்தி, வாழ்க்கை மற்றும் எதார்த்தத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் தழுவி, அவற்றைக் கடந்து செல்கிறது என்பதை மறைநூலின் இறைத்தோற்றம் நமக்கு நினைவூட்டுகிறது: அதை வெறும் கொடைக்குணமுள்ள அல்லது சமூகச் செய்தியாகக் குறைக்க முடியாது, மாறாக இயேசுவில் கடவுள் நமக்குக் கொடுத்த முழுமையான மற்றும் நிலைவாழ்வின் மகிழ்ச்சியான அறிவிப்பாகும்.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம், ஏனென்றால் அவருடைய நற்குணத்தில், அவர் ஒருபோதும் நம் வாழ்க்கைக்கு அவருடைய வார்த்தையின் அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்கத் தவறமாட்டார், மேலும் நம்முடைய வார்த்தைகளும் செயல்களும் கடவுளின் அன்பைத் தெளிவாக வெளிப்படுத்த இறைவேண்டல் செய்வோம்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 பிப்ரவரி 2026, 13:36