பணியாற்றுவது மட்டுமல்ல மற்றவர்களுடன் இணைந்து பயணியுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமையன்று, 'இத்தாலியின் இரக்கச் சங்கம்' என்ற கூட்டமைப்பின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த போது, அதன் கிறிஸ்தவ தோற்றம் பற்றியும், அது இன்றும் ஏன் முக்கியமானதாக அமைந்துள்ளது என்பது பற்றியும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
தொடக்கத்தில் அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்த திருத்தந்தை, 13 ஆம் நூற்றாண்டு புளோரன்சில் இருந்து மறைச்சாட்சி புனித பீட்டர் போன்ற நபர்களால் ஈர்க்கப்பட்ட அவ்வமைப்பின் ஆன்மிக அடித்தளம் பற்றி தனது உரையில் குறிப்பிட்டார்.
அவர்களின் பிறரன்புப் பணிகளை, குறிப்பாக நோயாளர்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய திருத்தந்தை, "உங்களின் நோக்கம் மற்றவர்களுக்காகப் பணியாற்றுவது மட்டுமல்ல, மாறாக மற்றவர்களுடன் ஒன்றித்துப் பயணிப்பது" என்று எடுத்துக்காட்டினார்.
இரத்தம் மற்றும் உடல் உறுப்பு தானம் முதல் குழந்தைகளின் வளர்ச்சிக்கான முயற்சிகளை ஆதரிப்பது வரை, அவ்வமைப்பின் தகவமைப்புத் திறனையும் ஒப்புக்கொண்டு மகிழ்ந்தார் திருத்தந்தை.
உறுப்பினர்கள் தங்கள் பணியை மகிழ்ச்சியுடனும் பணிவுடனும் தொடர ஊக்குவித்த திருத்தந்தை, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தனது இறைவேண்டலையும், அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
