தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை  

மனித உடன்பிறந்த உறவு என்பது ஓர் அவசரத் தேவை!

சகோதரத்துவ அன்பை மோதல்களையும் பிரிவினைகளையும் வெல்லும் ஓர் உயிருள்ள எதார்த்தமாக மாற்றுவதன் வழியாக, அனைத்து மக்களையும் சகோதரர் சகோதரிகளாகப் பார்க்குமாறு தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"இன்று, உடன்பிறந்த உறவுக்கான தேவை என்பது தொலைதூர இலட்சியமல்ல, மாறாக ஓர் அவசரத் தேவையாகும்" என்றும், "நமது சகோதரர் சகோதரிகளில் பலர் தற்போது வன்முறை மற்றும் போரின் கொடூரங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதை நாம் புறக்கணிக்க முடியாது" என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.  

உலக மனித உடன்பிறந்த உறவு நாள் மற்றும் சயீத் விருது வழங்கும் விழா குறித்து பிப்ரவரி 04, செவ்வாய்க்கிழமையன்று வழங்கியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, “மனித உடன்பிறந்த உறவு என்பது ஒரு வாழும் எதார்த்தம், அது எல்லா மோதல்களையும் விட வலிமையானது என்று நாம் அறிக்கையிட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் பெரிய இமாம் அஹ்மத் அல்-தையேப் இருவரும் கையெழுத்திட்ட மனித உடன்பிறந்த உறவுக்கான ஆவணத்தின் 7-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், போர் மற்றும் வன்முறையால் ஏற்படும் துன்பங்களை எடுத்துரைத்த திருத்தந்தை, மரியாதை, பகிர்வு மற்றும் இரக்கத்தின் அன்றாடச்  செயல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மனித உடன்பிறந்த உறவிற்கான சயீத் விருது வழங்கும் விழாக் குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, ஒருமைப்பாட்டை வளர்த்தல் மற்றும் பிளவுகளைக் குணப்படுத்தும் நோக்கத்துடன் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் உட்பட பரிசு பெறுபவர்களைப்  பாராட்டியுள்ளார்.

உலகளாவிய உடன்பிறந்த உறவை வளர்க்கும் முயற்சிகளுக்கு ஆதரவளித்ததற்காக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கும் சயீத் குழுவிற்கும் தனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

சகோதரத்துவ அன்பை மோதல்களையும் பிரிவினைகளையும் வெல்லும் ஓர் உயிருள்ள எதார்த்தமாக மாற்றுவதன் வழியாக, அனைத்து மக்களையும் சகோதரர் சகோதரிகளாகப் பார்க்குமாறு வலியுறுத்தி தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 பிப்ரவரி 2026, 12:37