அருள்பேறுகள் உண்மையான மகிழ்ச்சி என்னவென்பதைக் காட்டுகின்றன!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதை இயேசு கூறும் அருள்பேறுகள் நமக்குக் காட்டுகின்றன" என்றும், "மகிழ்ச்சியை நாம் சம்பாதிக்கக்கூடிய ஒன்றாகப் பார்க்கிறோமா அல்லது பகிர்ந்து கொள்ள வேண்டிய ஓர் அருள்கொடையாகப் பார்க்கிறோமா என்பதைப் பற்றி அவை நம்மைச் சிந்திக்க வைக்கின்றன" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
பிப்ரவரி 01, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.
இந்நாளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு குறித்த நற்செய்தி வாசகத்தை (காண்க. மத் 5: 1-12a) மையமாகக் கொண்டு தனது எண்ணங்களை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை
அருள்பேறுகள் வழிகாட்டும் விளக்குகள்
"இயேசு கூறும் அருள்பேறுகள் பெரும்பாலும் துன்பத்தாலும் அநீதியாலும் சூழப்பட்ட உலகில் வழிகாட்டும் விளக்குகளாக தங்கள் பங்கை வலியுறுத்துகின்றன" என்று விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
அருள்பேறுகள் ஒரு புதிய சட்டம்" என்றும், "அவை கல்லில் எழுதப்படவில்லை மாறாக, விசுவாசிகளின் இதயங்களில் எழுதப்பட்டவை" என்றும் கூறிய திருத்தந்தை, "ஏழைகள், பாதிக்கப்பட்டவர்கள், கனிவுடையவர்கள், இரக்கமுள்ளவர்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையையும் மீட்பையும் வழங்குகிறது" என்றும் விவரித்தார்.
"ஏழைகளையும் துன்பப்படுபவர்களையும் கடவுள் மட்டுமே ஆசீர்வதிக்க முடியும்" என்றும், "ஏனெனில் அவர் அனைவருக்கும் அன்பு, நீதி மற்றும் அமைதியை வழங்கும் உன்னதமானவர்" என்றும் விசுவாசிகளுக்கு நினைவூட்டினார் திருத்தந்தை.
மாற்றத்தை ஏற்படுத்தும் கிறிஸ்துவின் படிப்பினை
"கடவுளிடம் மட்டுமே கனிவுடையோர், இரக்கமுடையோர் மற்றும் இதயத்தில் தூய்மையுடையோர் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள்" என்று கூறிய திருத்தந்தை, "கிறிஸ்துவின் படிப்பினை உலக எதிர்பார்ப்புகளுக்கு முரணான மகிழ்ச்சியின் தீவிரமான மற்றும் மாற்றத்தை ஏற்படுக்கூடிய பார்வையை வெளிப்படுத்துகிறது" என்று கோடிட்டுக் காட்டினார்.
மேலும் வழக்கத்தில் உள்ள மரபுசார் அறிவிற்கு சவால் விடும் அருள்பேறுகளின் முரண்பாட்டையும் விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
கடவுளின் நீடித்த அன்பில் நம்பிக்கைகொள்வோம்
"அதிகாரமும் செல்வமும் மகிழ்ச்சியை வரையறுக்கும் என்று எதிர்பார்ப்பவர்கள் கிறிஸ்துவின் செய்தியைக் கண்டு வியப்படைவார்கள்" என்று குறிப்பிட்ட திருத்தந்தை, "வரலாற்றின் உண்மையான அர்த்தம் வெற்றியாளர்களால் வடிவமைக்கப்படவில்லை, மாறாக ஒடுக்கப்பட்டவர்கள் மீதான கடவுளின் மீட்கும் அன்பினால் வடிவமைக்கப்படுகிறது" என்று சுட்டிக்காட்டினார்.
"துன்புறுத்தல் மற்றும் பொய்மையை எதிர்கொள்வதில், கடவுள் நமது மீட்பு மற்றும் உண்மையின் ஆதாரமாக இருக்கிறார்" என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "விசுவாசிகள் தங்கள் நம்பிக்கையை உலகப் பொய்த்தோற்றங்களில் அல்ல, மாறாக மிகவும் கடினமான சோதனைகளைக் கூட தாங்கி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கடவுளின் நீடித்த அன்பில் வைக்க வேண்டும்" என்று ஊக்குவித்தார்.
அருள்பேறுகளின் எடுத்துக்காட்டு அன்னை மரியா
இறுதியில், அருள்பேறுகளின் எடுத்துக்காட்டாக விளங்கும் அன்னை கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டிய திருத்தந்தை, "மரியாவைப் போலவே, நம் துன்பத்தை மகிழ்ச்சியாக மாற்றும் கடவுளின் அருளுக்கு திறந்த மனம் கொண்டிருப்போம்" என்று கூறி தனது மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
