கிறிஸ்தவ உருவாக்கப் பயிற்சியின் நோக்கம் வாழ்வையே அர்ப்பணிப்பது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 6, வெள்ளிக்கிழமையன்று, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீடத்துறையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், திருஅவைக்குள் கிறிஸ்தவ உருவாக்கப் பயிற்சியின் முக்கிய பங்களிப்பை மையமாகக் கொண்டு வலிமைவாய்ந்ததொரு செய்தியை வழங்கினார்.
தனது உரையில், ஆழமான, மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திருத்தந்தை, உருவாக்கப் பயிற்சி என்பது கோட்பாட்டைப் பரப்புவது மட்டுமல்ல, உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை உருவாக்குவதும் வளர்ப்பதும் ஆகும் என்பதை புனித பவுலின் வார்த்தைகளிலிருந்து எடுத்துக்காட்டினார்.
"கிறிஸ்தவ உருவாக்கப் பயிற்சியின் நோக்கம் கற்பிப்பது மட்டுமல்ல, நம் வாழ்வையே முழுவதுமாக அர்ப்பணிப்பதும், கிறிஸ்து நமக்குக் கொண்டுவரும் மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதும் ஆகும்" என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மேலும் மனித வாழ்க்கை குடும்பத்திற்குள் வளர்க்கப்படும் விதத்தைப் போலவே, துடிப்பான சமூகத்தின் அன்பு மற்றும் முன்மாதிரியின் மூலம் நம்பிக்கை சிறப்பாகக் கடத்தப்படுகிறது என்பதை கோடிட்டுக் காட்டினார் திருத்தந்தை.
உருவாக்கப் பயிற்சியின் சமூகப் பரிமாணம் குறித்தும் விளக்கிய திருத்தந்தை, "தனிப்பட்ட தலைவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருஅவையே மக்களை தங்களின் விசுவாசப் பயணத்தில் வழிநடத்த அழைக்கப்படுகிறது என்பதை விசுவாசிகள் அங்கீகரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
பல்வேறு நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்க திருத்தூதர்கள் பணிக்கப்பட்டதைப் போலவே, இன்றைய உருவாக்குநர்களும் புதிய விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டிய திருத்தந்தை, உடன்படிக்கை, பொறுமை மற்றும் தனிப்பட்ட ஈடுபாட்டின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
இறுதியாக, அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் பல இருந்தபோதிலும், தங்கள் பணியில் உறுதியாக இருக்குமாறு அவர்களை ஊக்குவித்த திருத்தந்தை, அன்னை கன்னி மரியாவின் முன்மாதிரியை எடுத்துக்காட்டி, விசுவாசிகள் அவரது பரிந்துரையில் நம்பிக்கை வைத்து திருஅவைக்குச் சீடர்களை உருவாக்கும் பணியில் ஈடுபடும்போது அவரது உறுதியான நம்பிக்கையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
