அருள்பணியாளர் உருவாக்கப் பயிற்சியகங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் திருத்தந்தை அருள்பணியாளர் உருவாக்கப் பயிற்சியகங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் திருத்தந்தை   (ANSA)

அருள்பணித்துவப் பயிற்சி என்பது கிறிஸ்துவுடனான உறவில் தொடங்குகிறது!

திருத்தந்தை தனது உரையில், "கடவுளுடன் உண்மையிலேயே இணையாமல் அருள்பணித்துவப் பயிற்சிகளுக்குப் பழகும் ஒரு மாணவர் அல்லது அருள்பணியாளர் ஆபத்தில் உள்ளார்" என்றும், "அருள்பணித்துவ உருவாக்கப் பயிற்சி என்பது, கிறிஸ்துவுடனான உண்மையான, தனிப்பட்ட உறவில் தொடங்குகிறது" என்று எடுத்துக்காட்டினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அருள்பணித்துவ மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இயற்கைக்கு அப்பாற்பட்ட கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்திய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், கடவுளுடன் வாழும் உறவு  இல்லையென்றால் அருள்பணித்துவ உருவாக்கப் பயிற்சி அர்த்தமிழந்துவிடும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.

பிப்ரவரி 28, சனிக்கிழமையன்று, நான்கு ஸ்பானிய அருள்பணியாளர் உருவாக்கப் பயிற்சியகங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை,  அருள்பணியாளர் உருவாக்கப் பயிற்சியகங்கள் "திருஅவைக்கு நம்பிக்கையின் அடையாளம்" என்று குறிப்பிட்டார்.

எழுத்தாளர் ஜி. கே. செஸ்டர்டனை மேற்கோள் காட்டி, "வாழ்க்கையிலிருந்து இயற்கைக்கு அப்பாற்பட்டதை நீக்குவது அதை மிகவும் இயற்கையானதாக மாற்றாது, மாறாக இயற்கைக்கு மாறானதாக மாற்றிவிடும்"  என்று அவர்களிடம் எச்சரித்தார் திருத்தந்தை.

மேலும் "அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள் கடவுளைப் பற்றிப் பேசுவதைவிட, அவருடைய உடனிருப்பு தத்துவார்த்தமானது என்பதைக் காட்டும் விதமாக வாழ வேண்டும்" என்று அவர்களிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.

"கடவுளுடன் உண்மையிலேயே இணையாமல் அருள்பணித்துவப் பயிற்சிகளுக்குப் பழகும் ஒரு மாணவர் அல்லது அருள்பணியாளர் ஆபத்தில் உள்ளார்" என்று கூறிய திருத்தந்தை, "அருள்பணித்துவ உருவாக்கப் பயிற்சி என்பது, கிறிஸ்துவுடனான உண்மையான, தனிப்பட்ட உறவில் தொடங்குகிறது" என்று அவர்களிடம் எடுத்துக்காட்டினார்.

முதல் திருப்பாடலை மேற்கோள் காட்டி, ஒரு பலனளிக்கும் இறையழைத்தலை நீரோடைகளின் ஓரமாக நடப்பட்ட ஒரு மரத்துடன் ஒப்பிட்ட திருத்தந்தை, அதன் வலிமை என்பது வெளிப்புறத் தோற்றத்தை விட ஆழமான வேர்களில் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

"அதேவேளையில், செயல்பாடும் வெளிப்புற வடிவமும் உண்மையான உள் நம்பிக்கையை மாற்றும்போது ஆன்மிக வாழ்க்கை நின்று கொண்டே இறக்கக்கூடும்" (நற்கனிகள் தராத நிலை) என்று எச்சரித்தார் திருத்தந்தை.

இறுதியாக, இயேசு தம்முடைய சீடர்களை முதலில் "தம்முடன் இருக்க" அழைத்ததை நினைவுகூர்ந்து, "ஆசிரியருடன் நிலைத்திருக்க" அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்களை ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 பிப்ரவரி 2026, 12:54