தேடுதல்

2024-ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக குழந்தைகள் நாள் நிகழ்வு 2024-ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக குழந்தைகள் நாள் நிகழ்வு   (ANSA)

உலக குழந்தைகள் நாளிற்கான குழுவை இரத்து செய்தார் திருத்தந்தை!

"உலக குழந்தைகள் நாள் நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முயற்சிகளை நெறிப்படுத்தவும், அதிக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கவும், கவனமாக கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலக குழந்தைகள் நாள் நிகழ்வை நிர்வகிக்க 2024-ஆம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட உலக குழந்தைகள் நாளிற்கான பாப்பிறைக் குழுவை அதிகாரப்பூர்வமாக இரத்து செய்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பிப்ரவரி 13, வெள்ளியன்று, அறிவிக்கப்பட்ட இந்த முடிவு,  2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற  ஒரு மறுசீரமைப்பிற்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் திருத்தந்தையின் நேரடி மேற்பார்வையிலிருந்த இந்தக் குழுவை பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீடத் துறையின் கீழ் மாற்றியுள்ளார் திருத்தந்தை.

உலக குழந்தைகள் நாளை நிர்வகிப்பதற்காக, பாப்பிறைக் குழு முதலில் உருவாக்கப்பட்டது. இது உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளை இசை, விசுவாசம் மற்றும் சான்றுபகர்தலின் கொண்டாட்டத்தில் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது.

உலக இளைஞர் நாளைப் போன்ற இந்த நிகழ்வு முதன் முதலில் 2024-ஆம் ஆண்டு மே மாதத்தில் உரோமையில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் மோதல் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 50,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும், இதன் இரண்டாவது நிகழ்வு வரும் செப்டம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், திருத்தந்தை லியோ அவர்கள், அதை ஒழுங்கமைப்பதற்கான அனைத்துப் பொறுப்புகளையும் கர்தினால் கெவின் ஜோசப் ஃபர்ரெல் (Kevin Joseph Farrell) அவர்கள் தலைமையிலான பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீடத் துறைக்கு வழங்கியுள்ளார்.

மேலும் பாப்பிறைக் குழுவின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,  அதன் உறுப்பினர்களின் பொறுப்புகளும் இனி செயல்பாட்டில் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முயற்சிகளை நெறிப்படுத்தவும், அதிக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கவும், கவனமாக கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத்   தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இந்நிலையில், பாப்பிறைக் குழுவின் மீதமுள்ள உடைமைகள்  குறித்த அறிக்கை உட்பட, குழுவின் இறுதிப் பணிகளை இப்போது பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீடத் துறை கவனித்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 பிப்ரவரி 2026, 11:36