திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

மனித வர்த்தகத்திற்கு எதிராக உலகளாவிய நடவடிக்கை வேண்டும்!

மனித வர்த்தகத்திற்கு எதிரான 12-வது உலக இறைவேண்டல் மற்றும் விழிப்புணர்வு நாள் குறித்த தனது செய்தியில், ஒவ்வொரு நபரின் உள்ளார்ந்த மாண்பிற்கு மரியாதை செலுத்துவதில் அமைதி வேரூன்றிய ஓர் உலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, அனைத்து வடிவங்களிலும் மனித வர்த்தகம் மற்றும் சுரண்டலுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"போர் இல்லாதது மட்டுமல்ல, அனைவரின் மாண்பும் முழுமையாக மதிக்கப்படும் அமைதியான வாழ்க்கை முறை கொண்ட ஓர் உலகத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்" என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மனித வர்த்தகத்திற்கு எதிரான 12-வது உலக இறைவேண்டல் மற்றும் விழிப்புணர்வு நாள் குறித்து பிப்ரவரி 06, வெள்ளியன்று வழங்கியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தத்தை, மனித வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ள அதேவேளை, உண்மையான அமைதிக்கான திறவுகோலாக ஒவ்வொருவரின் மாண்பையும்  பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.

“வலுவிழந்த நிலையிலுள்ள நபர்கள், குறிப்பாக இடம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தொடர்ச்சியான வன்முறை மற்றும் சுரண்டலை அவசரமாக எதிர்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

“புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் பொருளாதார சமத்துவமின்மையால் பெருகிய முறையில் வரையறுக்கப்பட்ட உலகில், மனித வர்த்தகத்தில் ஈடுபடுவோர் பெரும்பாலும் அதிக தேவையில் உள்ளவர்களை இரையாக்கி, இலாபத்திற்காக அவர்களைச் சுரண்டிக்கொள்கின்றனர்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.

தனிநபர்கள் இணையதளத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட நிர்பந்திக்கப்படுவது, அவர்களின் துயரத்தை மேலும் சிக்கலாக்கும் "சைபர் அடிமைத்தனம்" அதாவது, சட்டவிரோதமான செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தும் செயல் பெரும் துயரமாக அதிகரிப்பது குறித்தும் எச்சரித்துள்ளார் திருத்தந்தை.

“உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை உண்மையான அமைதி என்பது மோதல் இல்லாதது மட்டுமல்ல, மாறாக மனித மாண்பை அங்கீகரிப்பது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நவீன கால அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் இறைவேண்டல் மற்றும் விழிப்புணர்வு இரண்டையும் கருவிகளாக எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, “இறைவேண்டல் அலட்சியத்திற்கு எதிரான மீள்தன்மையை வலுப்படுத்துகிறது, அதேவேளை, விழிப்புணர்வு மறைக்கப்பட்ட சுரண்டலை வெளிக்கொணர உதவுகிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துலக அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர்களாக மாறிய உயிர் பிழைத்தவர்கள் உட்பட, மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க அயராது உழைப்பவர்களுக்கும் தனது நன்றியை சமர்ப்பித்துள்ளார் திருத்தந்தை.

இந்த நாளை நினைவுகூரும் முயற்சிகளை நம்பிக்கை மற்றும் மீள்தன்மையின் அடையாளமாக மாறிய முன்னாள் அடிமையான புனித ஜோசபின் பக்கிதாவின் பரிந்துரை இறைவேண்டலில் ஒப்புவிப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இறுதியாக, ஒவ்வொரு நபரின் உள்ளார்ந்த மாண்பிற்கு மரியாதை செலுத்துவதில் அமைதி வேரூன்றிய ஓர் உலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, அனைத்து வடிவங்களிலும் மனித வர்த்தகம் மற்றும் சுரண்டலுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 பிப்ரவரி 2026, 10:43