தேடுதல்

மிலானோ-கோர்டினா 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மிலானோ-கோர்டினா 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்   (ANSA)

அமைதி மற்றும் மனித மாண்பைக் காக்க திருத்தந்தை அழைப்பு!

"எந்த விலை கொடுத்தாலும் வெற்றியிலிருந்து மிகுதி (abundance) என்பது வருவதில்லை, மாறாக பகிர்ந்து கொள்வதிலிருந்தும், மற்றவர்களை மதிப்பதிலிருந்தும், ஒன்றித்துப் பயணிப்பதன் மகிழ்ச்சியிலிருந்தும் தான் மிகுதி என்பது வருகிறது" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மிலானோ-கோர்டினா 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றில், அமைதி, ஒன்றிப்பு மற்றும் மனித மாண்பை மேம்படுத்துவதில் விளையாட்டின் ஆழமான மதிப்பீட்டை கோடிட்டுக் காட்டியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

"நிறைவான வாழ்வு" என்று தலைப்பிடப்பட்ட இந்தச் செய்தியின் வழியாக, பிப்ரவரி 6 முதல் 22 வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கும், மார்ச் 6 முதல் 15 வரை பாராலிம்பிக் போட்டிகளுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

மேலும் “விளையாட்டு எவ்வாறு மனித உடன்பிறந்த உறவை வளர்க்கிறது” என்றும், “தனிநபர்கள் நன்மை மற்றும் புனிதத்தை நாட ஊக்குவிக்கிறது” என்றும் தனது செய்தியில் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

உலக அமைதியை மேம்படுத்த ஒலிம்பிக் எவ்வாறு உதவும் என்பதை வலியுறுத்திய முன்னாள் திருத்தந்தையர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றி  நினைவுகூர்ந்துள்ளதாகக் கூறியுள்ள திருத்தந்தை, ஒலிம்பிக் போர் நிறுத்தத்திற்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், இது விளையாட்டுகளின் போது போரை இடைநிறுத்த நாடுகளை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மோதல்கள் நிறைந்த உலகில், ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறையை எதிர்ப்பதற்கான கருவிகளின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை,  "மரண கலாச்சாரத்தை"  கண்டித்துள்ளதுடன் "ஆக்கிரமிப்பு, வன்முறை மற்றும் போர் எப்போதும் மனிதகுலத்திற்கு ஒரு தோல்வியைத்தான் தரும்" என்று மீண்டும் எச்சரித்துள்ளார்.

“நம்பிக்கை மற்றும் ஒப்புரவின் அடையாளமாக ஒலிம்பிக் போர் நிறுத்தத்தை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும்” என்று தனது செய்தியில் மீண்டும் விண்ணப்பித்துள்ள திருத்தந்தை, விளையாட்டின் பரந்த சமூக தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், உயர்நிலை மற்றும் அடிநிலைகளில் இடம்பெறும் விளையாட்டு உலகத்தை ஆதரிக்கவும் வழிநடத்தவும் திருஅவையை ஊக்குவித்துள்ளார்.

விளையாட்டு எவ்வாறு மேய்ப்புப் பணி அக்கறை மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கான ஒரு கருவியாகச் செயல்பட முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ விளையாட்டு அணியான வத்திக்கான் தடகள அணியை (Athletica Vaticana) மேற்கோள் காட்டியுள்ளார் திருத்தந்தை.

விளையாட்டை வெறும் காட்சிப் பொருளாகவோ அல்லது நிதி ஆதாயமாகவோ கண்ணோக்குவதை விடுத்து, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பொது நன்மைக்கான அதன் முக்கிய நோக்கத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

"எந்த விலை கொடுத்தாலும் வெற்றியிலிருந்து மிகுதி (abundance) என்பது வருவதில்லை, மாறாக பகிர்ந்து கொள்வதிலிருந்தும், மற்றவர்களை மதிப்பதிலிருந்தும், ஒன்றித்துப் பயணிப்பதன் மகிழ்ச்சியிலிருந்தும் தான் மிகுதி என்பது வருகிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

விளையாட்டின் ஆழமான நோக்கத்தை மீண்டும் கண்டறியவும், வரவிருக்கும் குளிர்கால விளையாட்டுகளை ஒன்றிப்பு மற்றும் அமைதியின் வலிமையை நினைவூட்டுவதாகப் பயன்படுத்தவும் அழைப்பு விடுப்பதாகக் கூறி தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 பிப்ரவரி 2026, 10:53