தேடுதல்

புனித ஜான் ஹென்றி நியூமன் புனித ஜான் ஹென்றி நியூமன்  (ANSA)

உரோமை பொது நாள்காட்டியில் புனித ஜான் ஹென்றி நியூமன்!

இந்த ஆணை நியூமன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கு அளித்த சேவை, அவரது மறையுரை மற்றும் கற்பித்தல் மற்றும் இறையியல் மற்றும் திருஅவையின் மீதான அவரது நீடித்த செல்வாக்கை வலியுறுத்துவதுடன், அவரை வரலாறு முழுவதும் திருஅவைக்கு வழிகாட்டும் ஒளியாகவும், கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஒரு முன்மாதிரியாகவும் முன்வைக்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அக்டோபர் 9 ஆம் தேதி விருப்ப நினைவு நாளாகக் கொண்டு, திருஅவையின் மறைவல்லுநர் புனித ஜான் ஹென்றி நியூமனை பொது உரோமை நாள்காட்டியில் சேர்த்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருத்தந்தையின் இந்த முடிவை இறைவழிபாடு மற்றும் அருளடையாளங்களின் ஒழுங்குமுறைக்கான திருப்பீடத்துறை பிப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட ஆணையில் அறிவித்துள்ளது.

1845-ஆம் ஆண்டு நியூமன் கத்தோலிக்க மதத்திற்கு மாறியதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 9-ஆம் தேதி இந்த விருப்ப நினைவுதினம் அனுசரிக்கப்படும்.

கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி அன்று, திருத்தந்தை லியோ அவர்கள், நியூமனை திருஅவையின் கல்விப் பணியின் இணை-பாதுகாவலராகவும், புனித தாமஸ் அக்வினாஸுடன் சேர்த்து திருஅவையின் மறைவல்லுநராகவும் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“இந்த நினைவு நாள் அனைத்து வழிபாட்டு நாள்காட்டிகளிலும், திருப்பலி மற்றும் நேர வழிபாட்டு புத்தகங்களிலும் சேர்க்கப்படும்” என்றும், “ஆயர்ப்பேரவைகள் மொழிபெயர்த்து அங்கீகரிக்கும் நூல்களைப் பயன்படுத்தி சேர்க்கப்படும்” என்றும் இவ்வாணை கூறுகிறது.

பிப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்ட இந்த ஆணையில், கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 9, ஞாயிறன்று, கர்தினால் ஆர்தர் ரோச் மற்றும் பேராயர் வித்தோரியோ பிரான்செஸ்கோ வயோலா இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஆணை நியூமன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கு அளித்த சேவை, அவரது மறையுரை மற்றும் கற்பித்தல் மற்றும் இறையியல் மற்றும் திருஅவையின் மீதான அவரது நீடித்த செல்வாக்கை வலியுறுத்துவதுடன், அவரை வரலாறு முழுவதும் திருஅவைக்கு வழிகாட்டும் ஒளியாகவும், கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஒரு முன்மாதிரியாகவும் முன்வைக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 பிப்ரவரி 2026, 13:13