தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

ஜனவரி & பிப்ரவரி மாத திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள்!

பேரருள்திரு தியோகோ ஜொவான்னி ரவெல்லி அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் திருவழிபாடுக் கொண்டாட்டங்களுக்கான அலுவலகம், திருஅவையின் திருவழிபாடு சட்டங்களுக்கு உட்பட்டு திருத்தந்தையின் அனைத்து வழிபாட்டு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து நடத்துகிறது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

இவ்வாண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் நிகழவிருக்கும் திருவழிபாட்டு விழாக்களுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது வத்திக்கானின் தலைமை அலுவலகம்.

முதலாவதாக ஜனவரி 25-ஆம் தேதி, ஞாயிறன்று, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான இறைவேண்டல் வாரத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், புனித பவுல் பெருங்கோவிலில் நடைபெறும் புனித பவுல் மனமாற்றத் திருவிழாவின் மாலைத் திருப்புகழ் வழிபாட்டைத் தலைமையேற்று வழிநடத்துகிறார் திருத்தந்தை.

அதன்பிறகு பிப்ரவரி 2-ஆம்-தேதி, திங்களன்று ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் திருவிழாவை முன்னிட்டு, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழும் திருப்பலிக்குத் தலைமை தாங்குகிறார். இந்தத் திருவிழா அர்ப்பண வாழ்வு வாழ்வோரின்  30-வது உலக நாளுடன் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 18 -ஆம்-தேதி, புதன்கிழமையன்று, நடைபெறவுள்ள திருநீற்றுப் புதன் வழிபாட்டிற்காக, அவெந்தீனோ எனுமிடத்தில் அமைந்துள்ள புனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து தொடங்கும் பாவமன்னிப்பு பவனியை வழிநடத்தி, அதன் இறுதியில், புனித சபீனா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை வழங்குவார் திருத்தந்தை.

மேலும் திருப்பீட உயர் அதிகாரிகளுடன் இணைந்து பிப்ரவரி 22 முதல் 27 வரை ஒரு வாரகால தியானத்தை அப்போஸ்தலிக்க அரண்மனையில்  மேற்கொள்வார் திருத்தந்தை.

பேரருள்திரு தியோகோ ஜொவான்னி ரவெல்லி அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் திருவழிபாடுக் கொண்டாட்டங்களுக்கான அலுவலகம், திருஅவையின் திருவழிபாடு சட்டங்களுக்கு உட்பட்டு திருத்தந்தையின் அனைத்து வழிபாட்டு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து நடத்துகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஜனவரி 2026, 13:35