திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

தவக்காலத்தின் போது உரோமின் ஐந்து பங்குத்தளங்களுக்கு திருத்தந்தை

முன்னாள் திருத்தந்தையர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, மறைமாவட்டம் முழுவதும் மேய்ப்புப்பணி ஈடுபாட்டை வலுப்படுத்துவதை திருத்தந்தை லியோ அவர்களின் இந்தப் பயணங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

தவக்காலத்தின் போது உரோமை மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பங்குத் தளங்களைச் சந்திக்கவுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்தந்தப் பங்குச் சமூகங்களைச் சந்திப்பதோடு, அங்குத் திருப்பலியையும் நிறைவேற்றுவார்.

ஜனவரி 23, வெள்ளியன்று, உரோமை மறைவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள செய்தி ஒன்றில் சாம்பல் புதன்கிழமைக்கு அடுத்த நாளான பிப்ரவரி 19, வியாழனன்று, மறைமாவட்ட அருள்பணியாளர்களுடனான அவரது சந்திப்பைத் தொடர்ந்து இப்பயணங்கள் அமையும் என்று குறிப்பிட்டுள்ளது.

உரோமை நகரின் ஐந்து மேய்ப்புப்பணி மண்டலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பங்குத் தளங்களுக்கு திருத்தந்தை பயணம் மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளது.

முதலாவதாக, பிப்ரவரி 15, ஞாயிறன்று, ஓஸ்தியா லிடோவில் உள்ள அமைதியின் அரசி புனித மரியா பங்குத் தளத்தையும், அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 22, ஞாயிறன்று, காஸ்ட்ரோ பிரித்தோரியோவில் உள்ள இயேசுவின் திருஇருதயப் பங்குத் தளத்தையும் பார்வையிட உள்ளார்.

மேலும், மார்ச் 1, ஞாயிறன்று, ஆண்டவரின் விண்ணேற்றப் பங்குத் தளத்தையும்,  மார்ச் 8, ஞாயிறன்று, புனித காணிக்கை அன்னை பங்குத் தளத்தையும் மற்றும் மார்ச் 15, ஞாயிறன்று, போந்தே மம்மோலோவில் உள்ள இயேசுவின் திருஇருதயப்  பங்குத்தளத்தையும் பார்வையிட உள்ளார்.

"திருத்தந்தையின் இந்தப் பயணங்கள் உண்மையான மேய்ப்புப்பணிப் பயணங்களாக அமையும்" என்று உரோமை மறைமாவட்ட முதன்மைப்பணியாளர் கர்தினால் பால்டோ ரெய்னா அவர்கள் தெரிவித்தார். மேலும் "ஒவ்வொரு பங்குத்தள சமூகத்துடனும் திருப்பலிக் கொண்டாடுவதற்கு முன்னதாக, திருத்தந்தை பங்கு குழுக்கள், மேய்ப்புப் பணியாளர்கள் மற்றும் இளைஞர்களைச் சந்திப்பார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் திருத்தந்தையர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, மறைமாவட்டம் முழுவதும் மேய்ப்புப்பணி ஈடுபாட்டை வலுப்படுத்துவதை திருத்தந்தை லியோ அவர்களின் இந்தப் பயணங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஜனவரி 2026, 13:54