திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (ANSA)

உலகப் பதற்றங்களுக்கு மத்தியில் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு அழைப்பு!

திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரையின்போது பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளிடையே உரையாற்றிய திருத்தந்தை, ஜனவரி 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான இறைவேண்டல் வாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

வளர்ந்து வரும் உலக மோதல்கள் மற்றும் மனித மாண்பு குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், விசுவாசிகளை அமைதிக்காகவும் ஒன்றிப்புக்காகவும் இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்துள்ளார் .

ஜனவரி 21, புதன்கிழமையன்று, வத்திகானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற பொது மறைக்கல்வி உரையின் போது, இன்றைய உலகில் போர் என்பது மீண்டும் ஒரு நடைமுறைப் பழக்கமாக மாறிவருவது குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை, இயேசுவின் இரக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு நீதி மற்றும் ஒப்புரவுக்காகச் இறைவேண்டல் செய்ய விசுவாசிகளை வலியுறுத்தினார்.

மேலும், பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளிடையே உரையாற்றிய திருத்தந்தை, ஜனவரி 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான இறைவேண்டல் வாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

கிறிஸ்து தமது பாடுகளுக்கு முன் இறைவேண்டல் செய்த ஒன்றிப்புக்கான இறைவேண்டலை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "நற்செய்திக்கு உண்மையாக சான்று பகரும் வகையில், தூய ஆவியாரின் அருளால் கிறிஸ்தவர்கள் பிரிவினைகளை வென்றெடுக்க வேண்டும்" என்று ஊக்கமளித்தார்.

"கிறிஸ்தவர்களிடையே முழுமையான மற்றும் வெளிப்படையான ஒன்றிப்பு ஏற்படுவதற்காக, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கச் சமூகங்கள் தங்கள் இறைவேண்டலை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்" என்று ஜனவரி 18, ஞாயிறன்று, திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் கூறியதை மீண்டும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

ஜனவரி 25, ஞாயிறன்று, புனித பவுல் மனமாற்றத் திருவிழாவின் போது, புனித பவுல் பெருங்கோவிலில் நடைபெறும் மாலைத் திருப்புகழ் வழிபாட்டிற்குத் தலைமை தாங்கி, இந்த இறைவேண்டல் வாரத்தை நிறைவு செய்வார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜனவரி 2026, 12:30