வத்திக்கான் பாதுகாப்புப் படையினருக்குத் திருத்தந்தை பாராட்டு!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
அண்மையில் வத்திக்கானில் நடந்த மிக முக்கியமான மற்றும் சவாலான நிகழ்வுகளின் போது பாதுகாப்புப் படையினர் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறைத் திறனை வெகுவாகப் பாராட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 19, திங்களன்று, புத்தாண்டின் தொடக்கத்தில் வத்திக்கானில் உள்ள பொதுப் பாதுகாப்பு ஆய்வுத் துறையின் தலைவர்களையும் பணியாளர்களையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடியபோது தனது மனம்நிறைந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார் திருத்தந்தை.
மேலும், பெரும் மக்கள் கூட்டத்தையும் சிக்கலான பாதுகாப்பு சவால்களையும் கையாளுவதில் அவர்கள் காட்டிய தியாக உணர்வு, நெகிழ்வுத்தன்மை மற்றும் விவேகம் ஆகியவற்றைப் பாராட்டிய திருத்தந்தை, அண்மைய மாதங்களில், குறிப்பாக, புனித பேதுரு பெருங்கோவில் மற்றும் பிற யூபிலி தளங்களுக்கு 3 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமான திருப்பயணிகள் வருகை தந்துள்ளதை எடுத்துக்காட்டினார்.
பாதுகாப்புப் பணியாளர்கள் நீண்ட நேர வேலை மற்றும் மோசமான வானிலை உள்ளிட்ட கடினமான சூழல்களுக்கு மத்தியில் பணியாற்றியதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இத்தகைய அசாதாரணமான பணி நேரங்களின்போது அவர்களுக்குத் துணையாக இருந்த அவர்களது குடும்பத்தினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகியவை தனிப்பட்ட தியாகங்களின் மூலமே சாத்தியமாகின்றன என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, அவை வெறும் பாதுகாப்பிற்கு மட்டும் அவசியமானவை அல்ல, மாறாக, திருப்பயணிகள் அமைதியுடனும் இறைவேண்டல் உணர்வுடனும் இருப்பதற்கான ஒரு சூழலை உருவாக்குவதற்கும் அத்தியாவசியமானவை என்று குறிப்பிட்டார்.
இத்தாலியக் காவல் துறையின் பாதுகாவலரான புனித மிக்கேல் அதிதூதரின் பரிந்துரையை வேண்டி, அதிகாரிகள் தங்கள் பணியில் நேர்மை, உறுதி மற்றும் சகோதரத்துவப் பண்பைத் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என அவர்களை ஊக்குவித்தார் திருத்தந்தை.
இறுதியாக, பாதுகாப்புப் பணியாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அன்னை கன்னி மரியா மற்றும் புனித மிக்கேல் அதிதூதரின் பாதுகாப்பில் ஒப்படைத்து இறைவேண்டல் செய்த திருத்தந்தை, அவர்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
