தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

கோவிலுக்கு வரும் எண்ணிக்கையை விட சொந்தம் என்ற உணர்வு முக்கியமானது!

திருத்தந்தை தனது பதில்மொழியில், தொடர்ச்சியான மனமாற்றம் மற்றும் கூட்டுப் புதுப்பித்தலின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன், "உண்மையான விசுவாசக் கதவாகிய கிறிஸ்துவின் இதயம், எப்போதும் திறந்திருக்கும்" என்பதை மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“மறைக்கல்வி வகுப்புகளில் குறைந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதை விட, திருஅவைக்குள் ஒரு சொந்தம் என்ற உணர்வை வளர்ப்பது மிக முக்கியமானது” என்றும், “பங்கேற்பு குறைவாக இருந்தாலும் கூட, மறைக்கல்வி ஆசிரியர்கள் மனம் தளராமல் பணியாற்றுங்கள்” என்று ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

'புனித பேதுரு சதுக்கம்' (Piazza San Pietro) என்ற அமைதி பற்றிய ஒரு பத்திரிகையின் ஜனவரி மாத இதழில், லாஃபென்பர்க்கைச் சேர்ந்த 50 வயதான சுவிஸ் மறைக்கல்வி ஆசிரியர் நுன்சியாவுக்கு அளித்துள்ள பதில் மொழியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

குடும்பங்களையும் இளைஞர்களையும் பங்குத்தள நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில் உள்ள சவால்களைக் குறித்தும், விளையாட்டு, விருந்துகள் மற்றும் நம்பிக்கையின் மீதான பொதுவான அலட்சியம் பெரும்பாலும் முன்னுரிமை பெறுவதாகவும், கோவில்கள் பெருகிய முறையில் காலியாக இருப்பதாகவும் அல்லது முக்கியமாக வயதானவர்கள் மட்டுமே கலந்துகொள்வதாகவும் தனது வருத்தத்தையும் கவலையையும் நுன்சியா திருத்தந்தைக்கு எழுதியுள்ள நிலையில் அவருக்கு இந்தப் பதில்,மொழியைத் தந்துள்ளார் திருத்தந்தை.

முதலில் நுன்சியாவின் கவலைகளை ஒப்புக்கொண்டுள்ள திருத்தந்தை லியோ அவர்கள், “இந்த நிலைமை நீண்ட கிறிஸ்தவ மரபுகளைக் கொண்ட நாடுகளில் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்துகிறது” என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலும் “மறைக்கல்வி வகுப்புகளில் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றாலும் கூட, மறைக்கல்விக்கு அர்ப்பணிக்கப்பட்ட மணிநேரங்கள் ஒருபோதும் வீணாகாது" என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, “பங்கேற்பவர்களைப் புள்ளிவிவரங்களுக்கு அப்பால் பாருங்கள்” என்றும் மறைக்கல்வி ஆசிரியர்களை வலியுறுத்தியுள்ளார்.

“பிரச்சனை எண்களில் இல்லை, ஆனால் மக்கள் தாங்கள் திருஅவையின் ஓர் அங்கம் அதாவது, கிறிஸ்துவின் திருவுடலின் செயல்பாடுள்ள உறுப்பினர்கள் என்பதை உணரவில்லை” என்றும், “அருளடையாளங்களைப் பயன்படுத்துவதன் வழியாக செயல்படுவதற்குத் தயாராக இல்லை” என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இதேபோன்ற சூழ்நிலைகளில் நுன்சியா மற்றும் பிற மறைக்கல்வி ஆசிரியர்களையும் ஊக்குவித்துள்ள திருத்தந்தை, தொடர்ச்சியான மனமாற்றம் மற்றும் கூட்டுப் புதுப்பித்தலின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன், "உண்மையான விசுவாசக் கதவாகிய கிறிஸ்துவின் இதயம், எப்போதும் திறந்திருக்கும்" என்பதை  அவர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

"கிறிஸ்துவின் நற்செய்தியின் மகிழ்ச்சி, மறுபிறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சிக்கு" சான்றுபகர கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களின் வார்த்தைகளை எடுத்துக்காட்டி தனது பதில்மொழியை நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஜனவரி 2026, 14:20