அருளின் அன்னை மரியா கோவிலில் இறுதிச் சடங்குத் திருப்பலி அருளின் அன்னை மரியா கோவிலில் இறுதிச் சடங்குத் திருப்பலி   (©Riccardo Capobianco)

ஏஞ்சலோ குகெல், உண்மையும் விடாமுயற்சியும் கொண்ட மனிதர்!

திருத்தந்தையின் உதவியாளராகப் பணியாற்றிய குகெல் அவர்கள், ஜனவரி 15, வியாழக்கிழமையன்று, தனது 90-வது வயதில் இறைபதமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமையன்று வத்திக்கானுக்கு அருகிலுள்ள அருளின் அன்னை மரியா கோவிலில் நடைபெற்றது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

முதலாம் ஜான் பால், இரண்டாம் ஜான் பால் மற்றும் பதினாறாம் பெனடிக்ட் ஆகிய மூன்று திருத்தந்தையரின் கீழ் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் வத்திக்கானில் பணியாற்றிய ஏஞ்சலோ குகெல் அவர்களின் மறைவைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இறுதிச் சடங்குகளின் போது வாசிக்கப்பட்ட இரங்கல் செய்தியில், "குகெல் அவர்கள் தனது பணிக் காலம் முழுவதும் விசுவாசத்துடனும் விடாமுயற்சியுடனும் பணியாற்றினார்" என்று பாராட்டியுள்ள திருத்தந்தை, அவரது வாழ்க்கையை "ஒரு முன்மாதிரியான கிறிஸ்தவ சாட்சி" என்று  வர்ணித்துள்ளார்.

வத்திக்கான் காவல் படைப்பிரிவு மற்றும் ஆளுநரகத்தில் குகெலின் முந்தைய பணிகள் பற்றியும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தனது இரங்கலைத் தெரிவித்து, "கிறிஸ்துவின் மிகவும் தாராள மனப்பான்மை கொண்ட சீடரின்" ஆன்மாவுக்காக இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார்.

குகலின் இறுதிச் சடங்குத் திருப்பலியை நிறைவேற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், குகெலை "அன்பான கணவர்" மற்றும் "முன்மாதிரியான தந்தை" என்று வர்ணித்து, அவரது இறை நம்பிக்கை, பணிவு மற்றும் பக்தி குறித்துக் குறிப்பிட்டார்.

மேலும் குகெலின் ஒளிமயமான இறை நம்பிக்கையை அன்புடன் நினைவு கூர்ந்த கர்தினால் பரோலின் அவர்கள், "அத்தகைய பக்தியுடன் பணியாற்றிய குகெலை, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால், தனிப்பட்ட முறையில்  விண்ணக வாழ்விற்கு வரவேற்றிருக்கலாம்" என்று நம்பிக்கை தெரிவித்தார். .

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் முன்னாள் செயலாளரான கர்தினால் ஸ்டனிஸ்லாவ் டிஜிவிஸ் அவர்களும், குகல் திருஅவைக்கு ஆற்றிய ஞானமும் விவேகமும் உண்மையுமுள்ள பணியை நினைவு கூர்ந்து போற்றினார்.

இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு  குகெலின் சவப்பெட்டி அவரது சொந்த ஊரான மியானுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஜனவரி 19, திங்கள்கிழமையன்று இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படுவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 ஜனவரி 2026, 13:11