கிறிஸ்துவில் அர்த்தத்தைத் தேட இளைஞர்களுக்கு திருத்தந்தை அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"ஆண்டவராகிய இயேசு மட்டுமே நமக்கு உண்மையான அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறார், மேலும் நமது ஒவ்வொரு உள்ளார்ந்த விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார்" என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 1 முதல் 5 வரை கொலம்பஸ், டென்வர் மற்றும் ஃபோர்ட் வொர்த்தில் (Columbus, Denver, and Fort Worth) நடைபெறும் SEEK26 மாநாடுகளில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஜனவரி 02, வெள்ளியன்று, அனுப்பியுள்ள காணொளிச் செய்தியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இயேசுவில் காணப்படும் உண்மையான அமைதியும் மகிழ்வும்
யோவான் நற்செய்தியிலிருந்து தனது சிந்தனைகளை வழங்கியுள்ள திருத்தந்தை, முதல் சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்வியான "நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?" என்பதில் கவனம் செலுத்தி, இளைஞர்கள் தங்கள் சொந்த அர்த்தம், நோக்கம் மற்றும் நிறைவை ஆராயுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பல இளைஞர்கள் அனுபவிக்கும் அமைதியின்மை என்பது, திறந்த இதயங்கள் உண்மைக்காக ஏங்குவதற்கான நேர்மறையான அறிகுறியாகும் என்று மொழிந்துள்ள திருத்தந்தை, உண்மையான அமைதியும் மகிழ்ச்சியும் இயேசு கிறிஸ்துவுடனான தனிப்பட்ட சந்திப்பில் காணப்படுகின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
இறைவேண்டல், தோழமை, அருளடையாளங்கள் மற்றும் நற்கருணை வழிபாடு மூலம் கிறிஸ்துவுடனான தங்கள் உறவை ஆழப்படுத்த ஒரு வாய்ப்பாக இந்த மாநாட்டைப் பயன்படுத்துமாறு பங்கேற்பாளர்களை ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை.
மறைபரப்புப் பணிக்கு அழைப்பு
திருத்தூதர் அந்திரேயாவை எடுத்துக்காட்டி, இயேசுவுடனான ஓர் உண்மையான சந்திப்பு என்பது, இயல்பாகவே மறைபரப்புப் பணி ஆர்வத்திற்கும் மற்றவர்களுடன் விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்திற்கும் வழிவகுக்கிறது என்று குறிப்பிட்டார்.
இறையழைத்தல் சார்ந்த தெளிந்து தேர்தலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அது அருள்பணித்துவ வாழ்வு, துறவற வாழ்வு, திருமணம் அல்லது இல்லற வாழ்வு என எதுவாக இருந்தாலும் சரி, கடவுள் எதற்காக அழைக்கிறார் என்று கேட்க இளைஞர்கள் அச்சப்பட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
இளையோரின் விருப்பங்களைப் புரிந்துகொள்ளும் கடவுள்
இளைஞர்களுடைய இதயங்களின் உள்ளார்ந்த விருப்பங்களைக் கடவுள் புரிந்துகொள்கிறார் என்றும், ஒவ்வொரு நபரையும் உண்மையான நிறைவை நோக்கி வழிநடத்துகிறார் என்றும் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார் திருத்தந்தை.
கன்னி மரியா கடவுளின் தாய் என்ற பெருவிழாவின் நாளிலே இந்த மாநாடு தொடங்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, பங்கேற்பாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அன்னை மரியாவின் பரிந்துரை செபத்தில் ஒப்படைப்பதாகவும், திருப்பிறப்பு காலத்திற்கான தனது ஆசீரை அவர்களுக்கு வழங்குவதாகவும் கூறி தனது காணொளி உரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
