திருத்தந்தை திருத்தந்தை  (ANSA)

திருஅவை அனைத்து வகையான யூத எதிர்ப்புகளையும் நிராகரிக்கிறது!

ஐக்கிய நாடுகள் அவை 2005 -ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதியை பன்னாட்டு பெரும் இன அழிப்பு (Holocaust) நினைவு நாளாக அறிவித்தது. 2026-ஆம் ஆண்டில், 'மனித மாண்பு மற்றும் உரிமைகளுக்காகப் பெரும் இன அழிப்பை நினைவுகூர்தல்' என்ற கருப்பொருளுடன் 25-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"கத்தோலிக்கத் திருஅவை அனைத்து வகையான யூத எதிர்ப்புகளையும் நிராகரிக்கின்றது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 27, செவ்வாயன்று, பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் (Holocaust) நினைவுகூரப்பட்ட வேளை இவ்வாறு கூறிய திருத்தந்தை, 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் - பெரும்பாலும் யூதர்கள் - கொல்லப்பட்ட ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவின் விடுதலையின் 81-ஆம் ஆண்டையும் நினைவில் கொண்டார்.

தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில் இதுபற்றி எழுதியுள்ள திருத்தந்தை, இனம், தேசியம் அல்லது மதம் சார்ந்த பாகுபாட்டை எதிர்ப்பதற்கு Nostra Aetate அதாவது, 'நமது காலத்தில்' என்று பொருள்படும்  இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தால் (1965) வெளியிடப்பட்ட ஆவணத்தின் கீழ் திருஅவையின் உறுதிப்பாட்டை மேற்கோள் காட்டினார். (Nostra Aetate என்பது கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருஅவைக்குள்ள உறவு பற்றிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஏடு)

ஐக்கிய நாடுகள் அவை  2005 -ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதியை 'பன்னாட்டு பெரும் இன அழிப்பு'  (Holocaust)  நினைவு நாளாக அறிவித்தது. 2026-ஆம் ஆண்டில், 'மனித மாண்பு மற்றும் உரிமைகளுக்காகப் பெரும் இன அழிப்பை நினைவுகூர்தல்' என்ற கருப்பொருளுடன் 25-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

நியூயார்க்கிலும் பிற இடங்களிலும் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்வுகள், தூதரக அரசு அதிகாரிகள், பெரும் இன அழிப்பில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து, பாதிக்கப்பட்டவர்களை கௌரவிக்கவும், உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

உலகளவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு மற்றும் பெரும் இன அழிப்பு மறுப்பு பற்றிய எச்சரிக்கைகளுக்கு மத்தியில், எதிர்கால இனப்படுகொலையைத் தடுப்பதில் கல்வியை ஒரு முக்கிய கருவியாக ஐக்கிய நாடுகள் அவையும் அதன் துணைவர் நிறுவனங்களும் வலியுறுத்துகின்றன.

அண்மைய ஆண்டுகளில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் 400 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய அறிக்கை ஒன்று கூறுகிறது. கடந்த காலத்தை நினைவில் கொள்வது மறுப்பை எதிர்த்துப் போராடவும், வெறுப்பை எதிர்கொள்ளவும், ஐ.நா. நிலைநிறுத்தும் மனித உரிமைகளை ஆதரிக்கவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஜனவரி 2026, 12:29