வத்திக்கான் மரபுப்படி உருவான திருத்தந்தையின் உருவ பல்வண்ணக்கல்!

புனித பவுல் பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பல்வண்ணக்கல் உருவப்படத்திற்கு அருகில் 13 மீட்டர் உயரத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் பாரம்பரிய பல்வண்ணக்கல் உருவப்படமும் நிறுவப்படும்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

புனித பவுல் பெருங்கோவிலில்  நிறுவுவதற்காக, வத்திக்கானின் பல்வண்ணக்கல் கலைக்கூடம் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் பாரம்பரிய பல்வண்ணக்கல் உருவத்தை வடிவமைத்துள்ளது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 14, புதன்கிழமையன்று, இந்தச் செய்தியை வழங்கியுள்ள திருப்பீடச் செய்தித் தொடர்பகம், "புதிய திருத்தந்தை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் மேற்கொள்ளப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க மரபினைப் போற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது"  என்றும், "இந்தப் பணி திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பொறுப்பேற்ற எட்டே மாதங்களில் நிறைவுபெற்றுள்ளது" என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் "இந்தப் பணி புனித பவுல் பெருங்கோவிலின் தலைமை அருள்பணியாளர் கர்தினால் ஜேம்ஸ் மைக்கேல் ஹார்வி அவர்களின் வேண்டுகோளின் பேரில் தொடங்கப்பட்டது" என்றும், 137 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட ஒரு வட்ட வடிவப் பதக்கம், புனித பேதுரு பெருங்கோவிலின் பராமரிப்பு அமைப்பின்கீழ் இயங்கும் வத்திக்கானின் பல்வண்ணக்கல் கலைக்கூடத்தில் தயாரிக்கப்படும் நீல வண்ணமயமாக்கப்பட்ட  (Smalti) கண்ணாடித் துண்டுகள் என்றும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தித் தொடர்பகம்.

ஒவ்வொரு சிறிய கண்ணாடித் துண்டும்,, பண்டைய கலைவடிவ நுட்பத்தைப் பயன்படுத்தி செதுக்கப்பட்டு வத்திக்கான் கலை மரபிற்கு ஏற்ப பாரம்பரிய எண்ணெய் பிசின் (oil-based mastic) கொண்டு பதிக்கப்பட்டுள்ளன.

சமகால இத்தாலிய கத்தோலிக்க கலைஞர் மற்றும் கலை வரலாற்றாசிரியரான Master Rodolfo Papa அவர்களின் வழிகாட்டுதலில் உருவாக்கப்படும் இந்த முறை மிகவும் நுணுக்கமானது. ஒரு பல்வண்ணக்கல் ஓவியத்தை உருவாக்குவதற்கு முன்பு, அதே அளவில் ஓர் எண்ணெய் வண்ண ஓவியத்தை வரைவது வத்திக்கானின் மரபாகும்.

புனித பவுல் பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பல்வண்ணக்கல் உருவப்படத்திற்கு அருகில் 13 மீட்டர் உயரத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் பாரம்பரிய பல்வண்ணக்கல் உருவப்படமும் நிறுவப்படும்.

இந்த மூல (அசல்) ஓவிய வரைபடம் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பெருங்கோவிலின் கட்டுமானப் பிரிவில் திருத்தந்தையர்களின் முழுமையான உருவப்பட வரிசையுடன் சேர்த்துப் பாதுகாக்கப்படும்.

வத்திக்கானில் புதன்கிழமை இடம்பெற்ற புதன் பொது மறைக்கல்வி உரைக்கு முன்னதாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களிடம் இந்தப் பணி நிறைவுற்ற பல்வண்ணக்கல் படைப்பு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஜனவரி 2026, 13:43