தேடுதல்

திருத்தந்தை மற்றும் அமைச்சர் கோம்போ உரையாடல் திருத்தந்தை மற்றும் அமைச்சர் கோம்போ உரையாடல்   (ANSA)

தான்சானியா அமைச்சர் திருத்தந்தையுடன் சந்திப்பு!

தான்சானியாவின் மதத் தலைவர்கள், ஆயர்கள் மற்றும் இமாம்கள் உட்பட, கூட்டாக வன்முறையைக் கண்டித்து, உண்மைகளை நிறுவவும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் ஒரு சுதந்திரமான விசாரணைக்கும் அழைப்பு விடுத்தனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 28, புதன்கிழமையன்று, திருத்தந்தையின் பொது மறைக்கல்வி உரைக்கு முன்னதாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தான்சானியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மஹ்மூத் தாபிட் கோம்போ அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் கோம்போ அவர்கள், வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள வேளை, கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு தான்சானியாவின் அரசுத் தலைவரான சாமியா சுலுஹு ஹாசனிடமிருந்து திருத்தந்தைக்கு ஒரு செய்தியையும் வழங்கினார்.

அந்நாட்டில் வாக்கெடுப்புக்குப் பிறகு, பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகப் பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, இது தான்சானியாவின் வழக்கமாக அமைதியான அரசியலில் இருந்து கூர்மையான மாற்றமாகும்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அரசுத் தலைவர் ஹசன் ஒரு விசாரணை ஆணையத்தை நிறுவினார், இது தற்போது வன்முறையைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை மறுகட்டமைக்கவும் பொறுப்பை தீர்மானிக்கவும் செயல்பட்டு வருகிறது.

தேர்தல்களின் போது சமூக அல்லது அரசியல் பதட்டங்கள் குறைவாக இருந்த ஒரு நாட்டில், இந்த அமைதியின்மை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான்சானியாவின் மதத் தலைவர்கள், ஆயர்கள் மற்றும் இமாம்கள் உட்பட, கூட்டாக வன்முறையைக் கண்டித்து, உண்மைகளைக் கொண்டுவரவும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுத்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 2, ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின்போது,   தான்சானியாவின் சூழ்நிலையை வெளிப்படையாக எடுத்துக்காட்டி, அங்குக் கட்டுப்பாடு மற்றும் உரையாடலை வலியுறுத்தினார் திருத்தந்தை.

குறிப்பாக, "தான்சானியாவுக்காக நாம் இறைவேண்டல் செய்வோம்," என்றும், "அண்மையத் தேர்தல்களுக்குப் பிறகு, அங்கு வெடித்துள்ள வன்முறையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றும் உரைத்த திருத்தந்தை, "வன்முறையை நிராகரித்து பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஜனவரி 2026, 12:57