PWPN உறுப்பினர்களுடன் திருத்தந்தை PWPN உறுப்பினர்களுடன் திருத்தந்தை   (ANSA)

உலகளாவியப் பரிந்துரையாளர்களாக மாற இளைஞர்களுக்கு அழைப்பு!

திருத்தத்தை தனது உரையில், பல்வேறு கலாச்சாரங்களையும் மொழிகளையும் ஒன்றிணைக்கும் இந்த வலையமைப்பில் பரந்த அளவிலான பங்கேற்பை ஊக்குவித்ததுடன், தனது மாதாந்திர இறைவேண்டல் நோக்கங்களை உலகெங்கிலும் உள்ள இலட்சக் கணக்கான மக்களுக்குப் பரப்புவதில் அதன் பங்களிப்பைப் பாராட்டி மகிழ்ந்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகளாவிய பரிந்துரையாளர்களின் அடுத்த தலைமுறையாக மாற இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 30, வெள்ளிக்கிழமையன்று, திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்பின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த போது இவ்வாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை, இளைஞர்களை இறைவேண்டல் பணியில் ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

"இளைஞர்களை இவ்வலையமைப்பில் பங்கேற்க அழைப்பது மிகவும் முக்கியமானது" என்றும், "இதனால் அவர்கள் முழு உலகத்தின் தேவைகளுக்கும் அடுத்த தலைமுறை பரிந்துரையாளர்களாக உருவாகலாம்" என்றும் நம்பிக்கை தெரிவித்த திருத்தந்தை, இளைஞர்கள் இயேசுவுடனான தங்களின் உறவை ஆழப்படுத்துவதற்கான ஒரு பாதையாக நற்கருணை இளைஞர் இயக்கத்தை எடுத்துக்காட்டினார்.

பல்வேறு கலாச்சாரங்களையும் மொழிகளையும் ஒன்றிணைக்கும் இந்த வலையமைப்பில் பரந்த அளவிலான பங்கேற்பை ஊக்குவித்ததுடன், தனது மாதாந்திர இறைவேண்டல் நோக்கங்களை உலகெங்கிலும் உள்ள இலட்சக் கணக்கான மக்களுக்குப் பரப்புவதில் அதன் பங்களிப்பைப் பாராட்டிய திருத்தந்தை, திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணியின் ஒருங்கிணைந்த பகுதி இறைவேண்டல் என்பதை அவர்களிடம் வலியுறுத்தினார்.

இறுதியாக, உலகளவில் ஆன்மிக ஆதரவையும் இரக்கத்தையும் ஊக்குவிப்பதற்கான அர்ப்பணிப்புக்காக இவ்வலையமைப்பின் அனைத்துலக இயக்குநர் அருள்பணியாளர் கிறிஸ்டோபல் போன்ஸ், துணை இயக்குநர்கள் பெட்டினா ரேட் மற்றும் அருள்பணியாளர் மிகுவல் மெலோ மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 ஜனவரி 2026, 12:18