திருத்தந்தை திருத்தந்தை   (AFP or licensors)

டோலிடோ பேராலயத்தின் 800-வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்துச் செய்தி!

"2026-ஆம் யூபிலி ஆண்டு அருள், மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் காலமாகவும், ஸ்பெயின், ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிற்கு டோலிடோ தலத்திருஅவையின் வரலாற்று மற்றும் ஆன்மிகப் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாகவும் இருக்கும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஸ்பெயின் நாட்டின் டோலிடோ நகரின் கோதிக்பேராலயம் கட்டப்பட்டதன் 800-வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கு அவ்வுயர் மறைமாவட்டத்தின் விசுவாசிகளுக்கு ஜனவரி 30, வெள்ளியன்று, வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

"2026-ஆம் யூபிலி ஆண்டு அருள், மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் காலமாகவும், ஸ்பெயின், ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிற்கு டோலிடோ தலத்திருஅவையின் வரலாற்று மற்றும் ஆன்மிகப் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாகவும் இருக்கும்" என்று தனது செய்தியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இப்பேராலயத்திற்கான முதல் அடிக்கல் 1226-ஆம் ஆண்டு பேராயர் ரொட்ரிகோ ஜிமெனெஸ் தெ ராடா மற்றும் மன்னர் மூன்றாம் ஃபெர்டினாண்ட்  இருவராலும் நாட்டப்பட்டதை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, திருஅவை வரலாற்றில் பேராலயத்தின் முக்கிய பங்கை வலியுறுத்தியுள்ளதுடன், “இதில் ஆட்சி மீட்பு  (Reconquista) மற்றும் புதிய உலகிற்கு கிறிஸ்தவத்தின் பரவல் ஆகியவை அடங்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பேராலயத்தில் நாள்தோறும் கொண்டாடப்படும் ஹிஸ்பானோ-மொசராபிக் வழிபாட்டு முறையைத் தொடர்ந்து பாதுகாக்குமாறு விசுவாசிகளை ஊக்குவித்துள்ள திருத்தந்தை, திருப்பீடத்துடன் அவர்களின் நீடித்த உறவு ஒன்றிப்பிற்குத் தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மேலும் இப்பேராலயத்தின் பிறரன்புப் பணிகள் மற்றும் சமூக முயற்சிகளுக்கு, குறிப்பாக, வறுமையின் புதிய வடிவங்கள் மீதான அதன் உதவிகளுக்கும் தனது நன்றிகளைச் சமர்ப்பித்துக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

இறுதியாக, டோலிடோ தலத் திருஅவைக்குத் தான் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்துள்ள திருத்தந்தை, விசுவாசிகளை இயேசுவின் அரவணைப்பிலும், அன்னை கன்னி மரியாவின் பாதுகாவலிலும் ஒப்படைத்து, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஜனவரி 2026, 11:39