தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (ANSA)

"உரையாடல் மோதலை வென்று அமைதியைக் கட்டமைக்கிறது"

"பொறுப்பான பத்திரிகை என்பது விரோதத்தை விட ஆக்கபூர்வமான உரையாடலை ஊக்குவிக்க வேண்டும். மேலும் பொது நன்மைக்கும், மனித குடும்பத்தின் ஒன்றிப்பிற்கும், இறுதியில் அமைதிக்கும் பங்களிக்க வேண்டும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"கருத்துகள், கண்ணோட்டங்கள் மற்றும் கலாச்சாரங்களில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், எப்போதும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையுடன் செயல்பட வேண்டிய பத்திரிகை சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை La Repubblica நாளிதழ் பிரதிபலிக்கிறது" என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 16, வியாழக்கிழமையன்று, La Repubblica எனப்படும் இத்தாலிய பொது நலன் நாளிதழ் ஒன்றின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி அதன் ஆசிரியர் குழுவிற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, அரை நூற்றாண்டு வரலாற்றைப் பதிவு செய்வதிலும், அதன் வாசகர்களுடன் வலுவான உறவை வளர்ப்பதிலும் அதன் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார்.

"இந்நாளிதழ் அரை நூற்றாண்டு வரலாற்றைத் தினமும் நினைவு கூர்ந்துள்ளது" என்றும், "அதன் வாசகர்களுடன் இணைந்து வளர்ந்து பல இத்தாலிய நகரங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தையின் மறைமாவட்டமான உரோமை நகரை இந்நாளிதழின் முக்கிய தளமாகவும், இத்தாலி மற்றும் உலகெங்கிலும் இடம்பெறும் நிகழ்வுகளைக் கவனிக்க பெருமைபெற்ற ஒரு சாதகமான இடமாகவும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

கடந்த ஐம்பது ஆண்டுகால நிகழ்வுகளை விளக்குவதில் இந்நாளிதழின் சுதந்திரத்தை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகக் கூறியுள்ள திருத்தந்தை, “அதில் திருஅவையின் வரலாறு பற்றிய செய்திகளும் அடங்கும்!” என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

"பொறுப்பான பத்திரிகை என்பது விரோதத்தை விட ஆக்கபூர்வமான உரையாடலை ஊக்குவிக்க வேண்டும்” என்றும், “பொது நன்மைக்கும், மனித குடும்பத்தின் ஒன்றிப்பிற்கும், இறுதியில் அமைதிக்கும் பங்களிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, "உரையாடல் மோதலை வென்று அமைதியைக் கட்டமைக்கிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, "இந்நாளிதழ் உண்மைக்கான மற்றும் நேர்மைக்கான தேடலால் ஈர்க்கப்பட்டு, தப்பெண்ணங்களிலிருந்து விடுபட்டு, சுதந்திரமான மற்றும் திறந்த தகவல்தொடர்பை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று நான் நம்புகின்றேன்" என்று கூறி தனது வாழ்த்துச் செய்தியை  நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஜனவரி 2026, 13:19