தொழில்நுட்பம் ஒருபோதும் மனித பொறுப்பை மாற்றக்கூடாது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"இன்றையத் தகவல் தொடர்பு வலையமைப்புகளுக்குள் அடிப்படை தகவல் தொடர்புச் செயல் பாதுகாக்கப்பட வேண்டும், வளர்க்கப்பட வேண்டும், மேலும் அதிகமாகத் தேடப்பட வேண்டும்" என்றும் "இறைத்தந்தையை வெளிப்படுத்தும் இயேசு கிறிஸ்து, இந்தத் தகவல் தொடர்பு யுகத்தில் எவ்வாறு நன்றாக வாழ்வது என்பதை நமக்குக் கற்பிக்கிறார்" என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 24, சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள, 60-வது உலகத் தகவல் தொடர்பு நாளுக்கான செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, "மனித இதயத்தின் பொறுப்பையோ அல்லது உறவின் உண்மையையோ எந்தத் தொழில்நுட்பமும் மாற்ற முடியாது" என்று நினைவுபடுத்தியுள்ளார்.
"நமது முகங்கள் மற்றும் குரல்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் மனிதத் தொடர்பு புனிதமானது, ஏனெனில் அது கடவுளின் சாயலையும் உடனிருப்பையும் வெளிப்படுத்துகிறது" என்று கூறியுள்ள திருத்தந்தை, "எண்ணிம ஊடகங்களாலும் (digital media) செயற்கை நுண்ணறிவாலும் மாற்றமடைந்துள்ள உலகில், தகவல் தொடர்பின் தனிப்பட்ட, உறவுமுறை மற்றும் நெறிமுறை பரிமாணங்களைப் பாதுகாக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
01. மனித அடையாளமாக முகமும் வார்த்தையும்
"முகங்களும் குரல்களும் தனித்துவமானவை, நமது தனிப்பட்ட அடையாளத்தை அவை வெளிப்படுத்துகின்றன" என்றும், "மறைநூல்களில் கடவுள் உறவுகள் மூலம் தொடர்பு கொள்கிறார், கடவுளின் காணக்கூடிய மற்றும் உயிருள்ள வார்த்தையான இயேசுவில் முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறார்" என்றும் கூறியுள்ள திருத்தந்தை, "மனித முகங்களையும் குரல்களையும் பாதுகாப்பது மனித மாண்பையும் இறை அன்பையும் மதிக்கும் ஒரு வழியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
02. சமூகத்தில் தொடர்பு
"சமூகத் தொடர்பு உறவுகளை உருவாக்குகிறது, கூட்டு நினைவகத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கிறது" என்றும் "மரியாதை நிறைந்த தகவல் தொடர்பு நம்பிக்கை, சமூகம் மற்றும் புரிதலை வளர்க்கிறது" என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
"தகவல் தொடர்பு ஆழம் இல்லாதபோது, குறிப்பாக எண்ணிம (டிஜிட்டல்) இடங்களில் தகவல் தொடர்பு வெறுமையாகவோ, கையாளக்கூடியதாகவோ அல்லது மனிதாபிமானமற்றதாகவோ மாறக்கூடும்" என்றும் எச்சரித்துள்ளார் திருத்தந்தை.
03. செயற்கை நுண்ணறிவின் சவால்கள்
"செயற்கை நுண்ணறிவு மனித குரல்களையும் முகங்களையும் உருவகப்படுத்த முடியும், ஆனால் அதேவேளையில், அது நெறிமுறை மற்றும் மானுடவியல் கவலைகளை எழுப்புகிறது" என்று மொழிந்துள்ள திருத்தந்தை, "செயற்கை நுண்ணறிவை அதிகமாகச் சார்ந்திருப்பது விமர்சன சிந்தனை, புரிந்துணர்வு மற்றும் உண்மையான மனித உறவுகளை பலவீனப்படுத்தும்" என்றும் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
மேலும் "உண்மையான சவால் என்பது, தொழில்நுட்பம் மனிதகுலத்திற்குப் பணியாற்றுவதை உறுதி செய்வதே தவிர, அதற்கு நேர்மாறாக அல்ல" என்றும் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
04. அறநெறிமுறை எண்ணிம கலாச்சாரத்தை உருவாக்குதல்
மேம்படுத்துநர்கள், சட்டமியற்றுபவர்கள், ஊடவியலாளர்கள் மற்றும் குடிமக்கள் என அனைவரும் உண்மை, மரியாதை மற்றும் பொது நன்மையைப் பாதுகாக்க வேண்டும்" என்று விண்ணப்பித்துள்ள திருத்தந்தை, "நனவான, பொறுப்பான எண்ணிம சூழலுக்குப் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாக வழிநடத்தவும், தனிப்பட்ட அடையாளத்தைப் பாதுகாக்கவும், ஆள்மாறாட்டம் அல்லது இணையவழி மிரட்டல் (deepfakes or cyberbullying) போன்ற தீங்குகளைத் தடுக்கவும் ஊடகமும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடும் மிக முக்கியமானவை" என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.
"கடவுளின் வார்த்தையையும் முகத்தையும் வெளிப்படுத்தும் உண்மை, மரியாதை மற்றும் அன்பில் வேரூன்றிய ஒரு தகவல் தொடர்பு மிகவும் அவசியம்" என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, "தொழில்நுட்பம் ஒருபோதும் மனித பொறுப்பை மாற்றக்கூடாது" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இறுதியாக, "ஒவ்வொரு நபரும் அனைத்து வகையான தகவல் தொடர்புகளிலும் உண்மையான உறவுகள், உரையாடல் மற்றும் மனித மாண்பை வளர்க்க அழைக்கப்படுகிறார்கள்" என்று கூறி 60-வது உலகத் தகவல் தொடர்பு நாளுக்கான தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
