மத்திய ஆப்பிரிக்கப் பகுதியின் ஆயர் பேரவைகளின் (ACERAC) 13-வது பொது அமர்வு மத்திய ஆப்பிரிக்கப் பகுதியின் ஆயர் பேரவைகளின் (ACERAC) 13-வது பொது அமர்வு 

மத்திய ஆபிரிக்கத் தலத்திருஅவை உயிர்த்துடிப்புடன் செயல்படுகிறது!

திருத்தந்தை தனது செய்தியில் நம்பிக்கை, நீதி, அமைதி மற்றும் வலுக்குறைந்த சமூகங்களுக்கான பராமரிப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் ஆயர்களின் சிறப்பு வாய்ந்த மேய்ப்புப் பணிகளை எடுத்துரைத்துள்ள அதேவேளை, நற்செய்தி இதயங்களை ஒப்புரவுக்கு உட்படுத்தி அமைதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இனக்குழு உணர்வு, இனங்களுக்கிடையேயான மோதல்கள், போர்கள் மற்றும் குடும்பப் பிளவுகள் போன்ற சவால்களுக்கு மத்தியிலும், மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள தலத்திருஅவையை "வாழும், வலுவான மற்றும் துடிப்பான எதார்த்தம்" என்று பாராட்டியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மத்திய ஆப்பிரிக்கப் பகுதியின் ஆயர் பேரவைகளின் (ACERAC) 13-வது பொது அமர்வின்போது, சாட்டில் (Chad) உள்ள திருப்பீடத் தூதரால் வாசிக்கப்பட்ட செய்தியில், இந்தப் பாராட்டை வழங்கியுள்ளார் திருத்தந்தை.

மேலும் கேமரூன், காபோன், ஈக்வதோரியல் கினியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயர்களிடம் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.

நம்பிக்கை, நீதி, அமைதி மற்றும் வலுக்குறைந்த சமூகங்களுக்கான பராமரிப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் ஆயர்களின் சிறப்பு வாய்ந்த மேய்ப்புப் பணிகளை எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, “நற்செய்தி இதயங்களை ஒப்புரவுக்கு உட்படுத்தி அமைதிப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இளைஞர்களை ஈடுபடுத்தி இடப்பெயர்வு மற்றும் புலம்பெயர்ந்தோர் போன்ற நெருக்கடிகளைச் சமாளிக்கவும் தலத்திருஅவைகளை ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை.

1995-ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் வெளியிடப்பட்ட 'ஆப்பிரிக்காவில் திருஅவை' (Ecclesia in Africa) என்ற ஒரு முக்கிய அப்போஸ்தலிக்க அறிவுரைமடலின் 31-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பேசியுள்ள திருத்தந்தை, "இந்த ஆவணம் முழுமையாகப் பொருத்தமானதாக உள்ளது" என்றும், "உலகப் போக்குகளுக்கு ஏற்ப நற்செய்தியை உள்ளூர் கலாச்சாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும்” என்றும் பங்குத்தள பணியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதியாக, அவர்களின் பணிகளை திருஅவையின் அன்னையாம் கன்னி மரியாவின் பாதுகாவலில் ஒப்படைத்து, அவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஜனவரி 2026, 11:48