புதிய திருமுழுக்குப் பயிற்சி வழி இயக்கம் குறித்து திருத்தந்தை புகழாரம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புதிய திருமுழுக்குப் பயிற்சி வழி இயக்கத்தின் உலகளாவிய மறைப்பணிக்காகவும், விசுவாசிகள் திருமுழுக்கின் அர்த்தத்தை மீண்டும் கண்டறிய உதவுவதில் அதன் பங்களிப்பிற்காகவும் அதனைப் பாராட்டியுள்ள அதேவேளை, “இந்த இயக்கம் உலகளாவியத் திருஅவையுடனான ஒன்றிப்பில் உறுதியாக வேரூன்றியிருக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 18, திங்களன்று இவ்வியக்கத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களிடம் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஒன்றிப்பு மற்றும் மேய்ப்புப் பணி சுதந்திரத்தை வலியுறுத்தினார்.
சவாலான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் விசுவாசத்தைப் பரப்புவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய தலைவர்கள், குடும்பத்தினர், மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தலத்திருஅவைக் குழுமத்தினருக்கு, குறிப்பாக மறைபரப்புப் பணியில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் திருத்தந்தை.
திருஅவையிலிருந்து விலகிச் சென்ற கிறிஸ்தவரல்லாதவர்களிடமும், திருமுழுக்குப் பெற்ற கத்தோலிக்கர்களிடமும் விசுவாசத்தை மீண்டும் தூண்டியதில் புதிய திருமுழுக்குப் பயிற்சி வழி அமைக்குப் பெருமை சேர்த்தார் திருத்தந்தை.
அதேவேளையில், தெளிந்து தேர்தல், பணிவு மற்றும் ஒன்றிப்பின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், ஆன்மிக மேட்டிமைவாதம் மற்றும் தனிவரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராகவும் எச்சரித்த திருத்தந்தை, “கடவுளின் அனைத்துக் கொடைகளும் பொது நன்மைக்காக வழங்கப்படுகின்றன” என்றும், “அவை திருஅவையின் ஒன்றிப்பிற்காகப் பணியாற்ற வேண்டுமே தவிர, பிரிவினைக்கு அல்ல” என்றும் வலியுறுத்தினார்.
உண்மையான கிறிஸ்தவச் சான்று என்பது, அச்சம் அல்லது குற்ற உணர்வை விட உள்மனச் சுதந்திரத்திற்கு வழிவகுக்கிறது என்பதை நினைவூட்டிய திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்பும், மறைக்கல்விக் கற்பிப்பும் வற்புறுத்தல், கடினத்தன்மை மற்றும் ஒழுக்கவாதம் (ஒழுக்கத்தின் பெயரால் வேண்டாத தலையீடுகள்) ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
புதிய திருமுழுக்குப் பயிற்சி வழி இயக்கம் அதன் பணியை மகிழ்ச்சியுடனும் பணிவுடனும் தொடர ஊக்குவித்த திருத்தந்தை, திருஅவையின் ஆதரவையும் ஆசீரையும் அதற்கு உறுதியளித்து தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
