தேடுதல்

திருத்தந்தை லியோ திருத்தந்தை லியோ  

திருத்தந்தையின் தூதர்கள் உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்!

"1701-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் கிளமென்ட் அவர்களால் நிறுவப்பட்ட இந்தப் பாப்பிறைக் கல்விக் கழகம், திருஅவை மற்றும் தூதரக செயலாண்மைத்திறத்துடன் இணைந்து வளர்ச்சியடைந்துள்ளது": திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"உண்மையான உறவு ஒன்றிப்பை உருவாக்க, கடவுளுக்கும், பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் மக்களின் குரல்களுக்கும் நாம் முதலில் செவிமடுக்க வேண்டும்" என்றும், "திருத்தந்தையின் தூதர்கள் உறவு பாலங்களைக் கட்டி எழுப்புபவர்களாக இருக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

உரோமையிலுள்ள பாப்பிறைக் கல்விக் கழகம் நிறுவப்பட்ட 325-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனவரி 17, சனிக்கிழமையன்று, அதன் குழுமத்திற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, "ஆழமான ஆன்மிகம் கொண்ட அருள்பணியாளர்களாக இருங்கள்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

"1701-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் கிளமென்ட் அவர்களால் நிறுவப்பட்ட இந்தப் பாப்பிறைக் கல்விக் கழகம், திருஅவை மற்றும் தூதரக செயலாண்மைத்திறத்துடன் இணைந்து வளர்ச்சியடைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, "இதில் இந்தக் கல்விக் கழகத்தின் வெளியுறவுச் செயலகத்துடன் ஒருங்கிணைப்பு மற்றும் வத்திக்கானின் தூதரகப் படையுடன் அதன் மேம்பட்ட தொடர்பு ஆகியவை அடங்கும்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"திருத்தூது அமைப்புவிதித் தொகுப்பு”, “பிரதிகாத்தே எவாஞ்செலியும்” எனப்படும் அப்போஸ்தலிக்க ஆவணம் மற்றும் மார்ச் 2025 அலுவல்சார் ஆவணத்தில், திருப்பீடத்தின் தலைமை ஆகியவை மேம்பட்ட கல்வி மற்றும் தூதரக ஆய்வுகளில் இக்கல்விக் கழகத்தின் பங்களிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன" என்றும் மொழிந்துள்ளார் திருத்தந்தை.

"இப்பாப்பிறைக் கல்விக் கழகத்தின் பாடத்திட்டம் சட்டக் கல்வியை ஆன்மிகப் பயிற்சியுடன் இணைத்து, வியூகம் மூலம் அல்லாமல், பிறரன்புப் பணிகள் மூலம் நல்லிணக்கப் பணிக்குத் அருள்பணியாளர்களைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

மாணவர்கள் தங்கள் ஆன்மிகத்தை ஆழப்படுத்துவதன் வழியாகவும், வலிமைக்காக இறைவேண்டலை நம்புவதன் வழியாகவும், இக்கல்விக் கழகத்தின் பாதுகாவலாரான புனித வனத்து அந்தோனியாரைப் பின்பற்றுமாறு ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை.

இறுதியாக, அன்னை கன்னி மரியாவின் பாதுகாவலில் இக்கல்விக் கழகத்தை ஒப்படைத்து, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது வாழ்த்துச் செய்தியை நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜனவரி 2026, 13:29