அமைதி மற்றும் ஒன்றிப்புக்காகக் குரல் எழுப்ப வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமைதிக்காக உலகச் சமூகம் தனது குரலை எழுப்ப வேண்டும்" என்று அழைப்பொன்றை விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 27, செவ்வாயன்று, திருத்தந்தையர்களின் கோடைகால ஓய்விடமான காஸ்தல் கந்தோல்போவில் இத்தாலிய தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு சுருக்கமான மற்றும் உணர்வுப்பூர்வமான அறிக்கையொன்றில், இவ்வாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
அதிகரித்து வரும் இராணுவ இருப்பு பற்றி, குறிப்பாக பாரசீக வளைகுடாவில் விமானம் தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கனுடன் அமெரிக்க கடற்படை தாக்குதல் குழு குறித்து செய்தியாளர்கள் திருத்தந்தையிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த திருத்தந்தை, "பிரச்சனைகளைத் தீர்க்க வன்முறையை விட உரையாடலை எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்ற அமைதிக்கான ஒரு வலிமைவாய்ந்த வேண்டுகோளை விடுத்த அதேவேளை, அதற்காக இறைவேண்டல் செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
உலகம் ஹோலோகாஸ்ட் எனப்படும் பெரும் இன அழிப்பு நினைவு நாளை அனுசரிக்கும் வேளையில், அனைத்து வகையான யூத எதிர்ப்புக்கும் எதிராகப் போராடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் திருத்தந்தை.
கடந்த கால கொடுஞ்செயல்களை நினைவில் கொள்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய திருத்தந்தை, அதேவேளையில், "மிகவும் இரக்கமுள்ள மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க உழைக்க வேண்டும்" என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.
மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்து வரும் சூழல் குறித்து பேசிய திருத்தந்தை, அப்பாவி உயிர்கள் மீதான வன்முறையின் தாக்கத்தை தனிநபர்கள் கருத்தில் கொள்ளவும், உரையாடல் மூலம் அமைதியான தீர்வுகளைத் தேடவும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
