ஒவ்வொரு ஆண்டும் கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டம் இடம்பெறும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வரும் ஜூன் மாதம் தொடங்கி, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவின் போது, வத்திக்கான் ஒவ்வொரு ஆண்டும் கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டங்களை நடத்தும் என்றும், இந்தக் கூட்டங்கள் திருஅவையின் எதிர்காலத்திற்கான நல்வழியைக் காட்டிட உதவும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 8, வியாழக்கிழமையன்று, சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் இறுதியில் இந்த அறிவிப்பை வெளியிட்ட திருத்தந்தை, திருஅவையின் வாழ்க்கையிலும் பணியிலும் பங்கேற்க மக்களுக்கு அதிகாரம் உண்டு என்றும் கூறினார்.
இந்தச் சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் இறுதியில் இதில் பங்கேற்ற 170 கர்தினால்களுக்கும், குறிப்பாக வயதுநிறைந்தவர்களின் ஞானத்திற்காக நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, இதில் பங்கேற்க முடியாதவர்களுக்கும் தனது ஆதரவை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தின்போது, விவாதங்கள், கலந்துரையாடல்கள், திருஅவையின் ஒன்றிப்பு, பணி மற்றும் "நற்செய்தியின் மகிழ்ச்சி" (Evangelii Gaudium) என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது மடலின் படிப்பினைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலின்போது, தென்னாப்பிரிக்கா, பிலிப்பீன்ஸ் மற்றும் கொலம்பியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கர்தினால்கள், வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருந்தபோதிலும், திருஅவை எவ்வாறு புரிதல் மற்றும் ஒத்துழைப்பை அனுமதிக்கிறது என்பதைப் பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக, வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. திருத்தந்தையின் முந்தைய அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான அழைப்பு இலத்தீன் அமெரிக்க கர்தினால்களுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது.
உலகளாவிய பிரச்சனைகளை, குறிப்பாக மோதல்களைத் தீர்ப்பதில் திருஅவைத் தொடர்ந்து பணியாற்றும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தலத்திருஅவைகளை ஆதரிக்கும் என்றும் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.
திருஅவையில் பெண்களின் பங்கு மற்றும் எவ்வாறு பொதுநிலையினர் மற்றும் பெண்களின் பங்களிப்புகள் சிறப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து கர்தினால்களுடன் விவாதித்தார் திருத்தந்தை.
இறுதியாக, ஒவ்வொரு கர்தினாலுக்கும் ஒரு சிறப்பு பதக்கத்தை வழங்கிய திருத்தந்தை, உலகின் சவால்களைச் சமாளிக்கத் தயாராக இருக்கும், மேலும் அனைவரையும் உள்ளடக்கிய, ஒத்துழைக்கும் வத்திக்கானுக்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
