திருமுழுக்கு யோவானின் முன்மாதிரியான வாழ்வைப் பின்பற்றுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"முதல் பார்வையில் மட்டுமே நன்றாகத் தோன்றும் விடயங்களைத் துரத்துவதை நிறுத்துவோம்" என்றும், "விழிப்புடன் இருந்து, எளிமையைத் தழுவி, நேர்மையாக நடந்து, பணிவுடன் வாழ்ந்து, நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் ஆழப்படுத்துவதன் வழியாக திருமுழுக்கு யோவானின் முன்மாதிரியைப் பின்பற்றுவோம்" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 18, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.
இந்நாளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு குறித்த நற்செய்தி வாசகத்தை (காண்க. யோவா 1: 29-34) மையமாகக் கொண்டு தனது எண்ணங்களை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
திருமுழுக்கு யோவானிடம் வெளிப்பட்ட பணிவு
தான் புகழ்பெற்றவராக இருந்தபோதிலும், இயேசுவின் பணிக்கு இடமளிக்க பணிவுடன் ஒதுங்கிச் சென்ற திருமுழுக்கு யோவானிடம் வெளிப்பட்ட மிகவும் பணிவு நிறைந்த மனப்பான்மையை விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
“திருமுழுக்கு யோவான் இயேசுவின் வழியை ஆயத்தப்படுத்துவது ஒன்றை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டிருந்தார்” என்றும், “அதற்கான அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்” என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, “புகழுக்கு அடிமையாகிவிடாமல், இயேசு தன்னை விட பெரியவர் என்று தாழ்மையுடன் கூறிய அதேவேளை, கடவுளின் பிரசன்னத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்” என்று குறிப்பிட்டார்.
இன்றையக் கால சூழ்நிலையை விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டி, புகழ் மற்றும் அங்கீகாரத்தை அதிகமாக விரும்புவதால் ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிராக எச்சரித்த திருத்தந்தை, “உண்மையான மகிழ்ச்சியும் மகத்துவமும் விரைவான உலக வெற்றியிலிருந்து வருவதில்லை, மாறாக, கடவுளால் அன்புகூரப்படுவதையும் மதிக்கப்படுவதையும் அறிவதன் வழியாக வருகிறது” என்று வலியுறுத்தினார்.
எளிமையும் நேர்மையும் கொண்டு வாழ்வோம்
“மேலோட்டமான விடயங்களால் பெரும்பாலும் திசைதிருப்பப்படும் உலகில், விசுவாசிகள் உண்மையிலேயே முக்கியமானவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, “எளிமை, நேர்மை மற்றும் ஆழமான ஆன்மிக சிந்தனை கொண்ட வாழ்க்கையை வாழ வேண்டும்” என்று விண்ணப்பித்தார். .
“திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி, அன்றாட இறைவேண்டல் மற்றும் அமைதியான சிந்தனை வழியாக கடவுளுடன் நெருக்கமான உறவைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று விசுவாசிகளை வலியுறுத்திய திருத்தந்தை, பணிவு மற்றும் ஞானத்தைத் தேடுவதில் விசுவாசிகளுக்கு வழிகாட்ட உதவும்படி, அன்னை கன்னி மரியாவிடம் மன்றாடினார்.
இறைவேண்டல் மற்றும் அக ஆய்வுக்கு நேரம் ஒதுக்குவோம்
அன்றாட வாழ்க்கையின் அமைதியற்ற சூழலிலிருந்து விலகி, கடவுளுடன் இணைவதற்கும், தங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், இறைவேண்டல் மற்றும் அக ஆய்வுக்கு அமைதியான நேரத்தைக் கண்டுபிடிக்குமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
இறுதியாக, இன்றைய பரபரப்பான சூழலில் வெளித்தோற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் உலகில் உள் அமைதியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டி தனது ஞாயிறு நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
