தேடுதல்

உரை வழங்கும் திருத்தந்தை உரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

திருத்தந்தையின் 100-வது உலக மறைபரப்பு நாள் செய்தி

ஜனவரி 25, ஞாயிறன்று, "கிறிஸ்துவுக்குள் ஒன்றாய், பணியில் இணைந்து" என்ற மையக்கருத்தில் வழங்கியுள்ள 100-வது உலக மறைபரப்பு நாள் செய்தியில், கிறிஸ்துவுக்குள் ஒன்றிப்பு, பணியில் ஒன்றிப்பு, அன்பின் நோக்கம் ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"தூய ஆவியில் மகிழ்வுடனும் ஆர்வமுடனும் அதன் பணியில் முன்னேறிச் செல்ல முழு திருஅவையும் நான் ஊக்குவிக்க விரும்புகிறேன்" என்றும் "இது நிறைவேற வேண்டுமெனில், கிறிஸ்துவில் ஒன்றுபட்ட இதயங்களும், அமைதியான சமூகங்களும், அனைவருடனும் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றும் தாராள மனப்பான்மையும் நமக்குத் தேவை" என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 25, ஞாயிறன்று, "கிறிஸ்துவுக்குள் ஒன்றாய், பணியில் இணைந்து" என்ற மையக்கருத்தில் வழங்கியுள்ள 100-வது உலக மறைபரப்பு நாள் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, கிறிஸ்துவுக்குள் ஒன்றிப்பு, பணியில் ஒன்றிப்பு, அன்பின் நோக்கம் ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

"'எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!'  (யோவான் 17:21) என்ற இயேசுவின் இறைவேண்டலை அடிப்படையாகக் கொண்டு, அவரில் ஒன்றிக்க வேண்டியது அவசியம்" என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை,  "இந்த ஒன்றிப்பு என்பது ஒரு வெற்றிகரமான பணிக்கு முக்கியமாகும்" என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

"திருஅவையின் ஒன்றிப்பு அதன் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு அடித்தளமாக உள்ளது" என்றும், "கிறிஸ்துவின் அன்பையும் ஒப்புரவையும் வெளிப்படுத்த மோதல்கள், தவறான புரிதல்கள் மற்றும் பிளவுகளை வெல்வது அதற்குத் தேவைப்படுகிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

01. கிறிஸ்துவுக்குள் ஒன்றாய் - அவரில் ஒன்றுபட்ட மறைபரப்பு சீடர்கள்

"மறைபரப்புப் பணியின் மையக்கரு கிறிஸ்துவுடன் ஒன்றிணைவதாகும், இது விசுவாசிகளை கடவுளுடனான பகிரப்பட்ட ஆன்மிக உறவில் ஒன்றிணைக்கிறது" என்றும், "மூவொரு கடவுளில் வேரூன்றிய இந்த ஒன்றிப்பு, திருஅவை  அதன் பணியைத் திறம்பட நிறைவேற்ற உதவுகிறது என்றும் மொழிந்துள்ளார் திருத்தந்தை.

மேலும் "நம்பகத்தன்மை கொண்ட சான்றைப் பேணுவதற்கும், பிற கிறிஸ்தவத் திருச்சபைகளுடன்  கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்ப்பதற்கும் சமூகங்களுக்குள் ஒப்புரவு மிகவும் அவசியம்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்  திருத்தந்தை.

"இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் படிப்பினைகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகளையும் பின்பற்றி, திருஅவை உறவு ஒன்றிப்பின் உணர்வில் நற்செய்தி அறிவிப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்" என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

02. மறைபரப்புப் பணியில் ஒன்றுபட்டிருத்தல் - உலகம் கிறிஸ்துவை நம்பும்படி

"மறைபரப்புப் பணியில் ஒன்றிப்பு என்பது ஒரு குறிக்கோள் அல்ல, மாறாக நற்செய்தியை உலகிற்குக் கொண்டு வரும் இலக்கை நோக்கி இயக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, "திருஅவையின் பணிக்கு, அதன் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பணியாற்றி ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும்" என்றும், "அவர்களின் பங்கு எதுவாக இருந்தாலும், கிறிஸ்துவின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருத்தந்தை மறைத்தூதுக் கழகங்களின் பணிகளையும், மறைப்பணி விழிப்புணர்வை வளர்ப்பதிலும், உலகளாவிய மறைப்பணி முயற்சிகளை ஆதரிப்பதிலும் அவற்றின் பங்களிப்பைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, "மறைபரப்புப் பணி ஒன்றிப்பு என்பது ஒரே இலக்கை நோக்கிச் செயல்படும் வெவ்வேறு தனிவரங்களின் இணக்கமாகக் கருதப்பட வேண்டும்" என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

3. அன்பின் நோக்கம் - கடவுளின் உண்மையுள்ள அன்பை அறிவித்தல், வாழ்தல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல்

"கிறிஸ்துவின் வாழ்க்கையில் வெளிப்பட்ட கடவுளின் அன்பை அறிவிப்பதே திருஅவையினுடைய பணியின் மையமாகும்" என்றும், "கிறிஸ்துவின் அன்பினால் நற்செய்தி அறிவிக்கப்படுகிறது, மேலும் அது செயலில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்" என்றும் எடுத்துரைத்துள்ளார்.

மேலும் "சவாலான அல்லது தொலைதூரப் பகுதிகளில், நற்செய்தியை அறிவிப்பதற்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் மறைப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை.

குறிப்பாக, உலக மறைபரப்பு நாளன்று, இறைவேண்டல் மற்றும் நடைமுறை பங்களிப்புகள் வழியாக  மறைபரப்புப் பணியாளர்களை ஆதரிக்க திருஅவையைக் கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இறையழைத்தல் மூலம் அதிகமான மக்களை மறைபரப்புப் பணியாளர்களாக மாற ஊக்குவிப்பதாகவும், இந்தப் பணியில் அன்பு முக்கியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

உலகம் முழுவதும் கிறிஸ்துவின் அன்பைப் பரப்புவதற்கான பணியில் ஒன்றிப்பு மற்றும் வெற்றிக்காக இறைவேண்டல் செய்வதாகவும், ஆன்மிக ஒன்றிப்பு மற்றும் மறைபரப்பு ஒத்துழைப்புக்கு அழைப்புவிடுப்பதாகவும் கூறி 100-வது உலக மறைபரப்பு நாளுக்கான தனது சிந்தனைகளை நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஜனவரி 2026, 11:47