தேடுதல்

எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இருங்கள் : திருத்தந்தை

திருக்காட்சிப் பெருவிழா திருப்பலியின் மறையுரையில், நற்செய்தியின் செய்தி குறித்தும், உலகிற்கு கடவுள் தன்னை வெளிப்படுத்தியதன் முக்கியத்துவம் குறித்தும் தனது சிந்தனைகளை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எதிர்நோக்கின் திருப்பயணிகளாக மாறுவது வியத்தகு செயல், நாம் தொடர்ந்து திருப்பயணிகளாக ஒன்றிணைந்திருப்பதும் வியத்தகு செயலே என்றும், கடவுளின் உண்மைத்தன்மை நம்மை தொடர்ந்து வியக்க வைக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 6, இச்செவ்வாயன்று, வாத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் இடம்பெற்ற திருக்காட்சிப் பெருவிழா திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, விடியற்காலையின் விண்மீனாகிய நம் அன்னை கன்னி மரியா, எப்போதும் நமக்கு முன் செல்கிறார் என்று தெரிவித்தார்.

மாற்றத்தித்திற்கு அழைக்கும் கடவுளின் உடனிருப்பு

கடவுள் தன்னை வெளிப்படுத்தும்போது மக்கள் எவ்வாறு வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள், அதாவது, சிலர் மகிழ்ச்சியடைகிறார்கள், மற்றவர்கள் அச்சம்கொள்கிறார்கள் அல்லது வருத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, புதிதாகப் பிறந்த அரசரைக் கண்டுகொள்வதற்கு உற்சாகமாகப் பயணித்த ஞானிகள் மூவரையும் முன்னுதாரணமாக எடுத்துக்காட்டிய அதேவேளை, ஏரோது அரசனும் எருசலேம் மக்களும் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கலங்கினர் என்றும் குறிப்பிட்டார்..

திருகாட்சிப் பெருவிழா எதிர்நோக்கின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், வரலாற்றில் கடவுளின் உடனிருப்பு தற்போதைய நிலையை அதிர்வடையச் செய்து மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தருணம் என்று மொழிந்த திருத்தந்தை, புதிதாக ஒன்று தொடங்குகிறது என்பதைக் காட்ட, "எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!" (எசா 60:1) என்று இறைவாக்கினர் எசாயா கூறியதை மேற்கோள் காட்டினார்.

அடிப்படையில், எருசலேமின் தலைவர்கள் இறைவார்த்தைகளைப் பற்றிய தங்கள் சொந்த புரிதலில் மிகவும் ஆறுதலடையக்கூடியவர்களாக இருந்தனர் என்றும், ஞானிகள் கிறிஸ்து பிறப்புக் குறித்த நற்செய்தியைக் கொண்டு வந்தபோது, ​​அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, ஞானிகள் தங்களிடம் கொண்டு வந்த நம்பிக்கையைப் பார்த்து அவர்கள்  அச்சமடைந்தனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

எதிர்நோக்கின் திருப்பயணிகள்

பின்னர் எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற யூபிலி ஆண்டின் அர்த்தம் குறித்து சிந்தித்த திருத்தந்தை, கடவுளின் பிரசன்னத்தைத் தேடி, திருப்பயணிகள் பலர், புனித பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவு வழியாகச் சென்றனர் என்று எடுத்துரைத்தார்.

சவால்கள் நிறைந்த உலகத்தை மீறி விசுவாசத்தைத் தேடும் இன்றைய ஞானிகளின் ஆன்மிகத் தேடல்களைப் பற்றி எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மக்களைக் கடவுளிடம் மிகவும் நெருக்கமாக கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதி, இந்தத் தேடலைத் தழுவிக்கொள்ளுமாறு திருஅவையை ஊக்குவித்தார்.

அச்சம் பார்வையைப் பறித்துவிடும்

சூழ்ச்சிக்கு வழிவகுக்கும் அச்சத்தை அகற்றுவது குறித்தும், ஞானிகளை ஏமாற்றி அவர்களின் பயணத்தைக் கட்டுப்படுத்த முயன்ற ஏரோது மன்னனின் முயற்சிகளைக் குறித்தும் விசுவாசிகளுக்கு விளக்கினார் திருத்தந்தை. 

மேலும் அச்சம் நம்மைப் பார்வையற்றவைகளாக ஆக்கிவிடும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை,  அதை நற்செய்தியின் விடுதலை மகிழ்ச்சியுடன் வேறுபடுத்திக்காட்டி, இது துணிவு, படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கையின் புதிய பாதைகளை ஊக்குவிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

நமது சமூகங்களில் வாழ்க்கை இருக்கிறதா? ஒரு பயணத்தில் நம்மை வழிநடத்தும் ஒரு கடவுளை நாம் நேசிக்கிறோமா, அவரைப் பற்றி பகிர்ந்து கொள்கிறோமா? என்ற முக்கியமான சில கேள்விகளையும் திருஅவைக்கு எழுப்பினார் திருத்தந்தை.

திருஅவை புதியவற்றைப் பாதுகாக்க வேண்டும்

இறுதியாக, திருஅவை புனிதமானதையும் புதிதாகப் பிறந்ததையும் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய திருத்தந்தை, சமூகம் பெரும்பாலும் மனித இலட்சியங்களையும் விருப்பங்களையும் வெறும் இலாபத்திற்கான பொருள்களாக மாற்றுகிறது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினார்.

ஞானிகள் மூவரும் போற்றித் துதித்த குழந்தை இயேசு, செல்வாக்குமிக்க ஓர் இடத்தில் காணப்படவில்லை, மாறாக எளிய மற்றும் ஏழ்மையான வடிவில் பெத்லகேமில் காணப்பட்டது என்பதை விசுவாசிகளுக்கு நினைவூட்டிய திருத்தந்தை, கடவுளின் செயல் மிகவும் எதிர்பாராத இடங்களில் காணப்படலாம் என்ற கருத்தை வலுப்படுத்தினார்.

உலக அதிகாரங்களின் வசீகரிப்புகளை எதிர்ப்போம்

எதிர்நோக்கின் திருப்பயணிகளாகவும், விசுவாசத்தில் ஒன்றுபட்டு, உலக அதிகாரங்களின் வசீகரிப்புகளை உறுதியுடன் எதிர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த திருத்தந்தை, விசுவாசம் மற்றும் அன்பின் புதிய விடியலை நோக்கிய இந்தத் தொடர்ச்சியான பயணத்தில், விடியலின் விண்மீனாய்த் திகழும் அன்னை மரியாவில், திருஅவை வழிகாட்டுதலையும் வலிமையையும் காண்கிறது என்று கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஜனவரி 2026, 11:59