உலகளாவிய கிறிஸ்தவ ஒன்றிப்புக்குத் திருத்தந்தை அழைப்பு!

ஜனவரி 25, ஞாயிறன்று, புனித பவுல் பெருங்கோவிலில் இடம்பெற்ற புனித பவுலின் மனமாற்றப் பெருவிழாவின் மாலைத் திருப்புகழ் வழிபாட்டில், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கடவுளின் அருளின் வலிமை குறித்தும் உலகளாவிய கிறிஸ்தவ ஒன்றிப்புக் குறித்தும் தனது மறையுரையில் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"உலகம் முழுவதும் உள்ள மக்கள் மற்றும் நாடுகளிடையே அமைதியின் நன்மைக்காக, ஒன்றிப்பு, நீதி மற்றும் புனிதத்தில் நற்செய்தியின் விதைகள் ஆர்மீனியா கண்டத்தில் தொடர்ந்து கனிகொடுக்கட்டும் என நாம் இறைவேண்டல் செய்வோம்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 25, ஞாயிறன்று, புனித பவுல் பெருங்கோவிலில் இடம்பெற்ற புனித பவுலின் மனமாற்றப் பெருவிழாவின் மாலைத் திருப்புகழ் வழிபாட்டில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, உலகளாவிய கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்தினார்.

கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதிலிருந்து திருத்தூதராக மாறிய புனித பவுலின் வியத்தகு மனமாற்றத்தைப் பற்றி  குறிப்பிட்ட திருத்தந்தை, "அவர் தன்னை 'திருத்தூதர்கள் அனைவரிடையேயும் கடையவன்' என்று அழைத்துக்கொள்கிறார்" என்றும், "கிறிஸ்துவைச் சந்திப்பது ஒரு நபரை எவ்வாறு முழுமையாக மாற்றும்" என்றும் எடுத்துரைத்தார்.

"ஒரு காலத்தில் இயேசுவைத் துன்புறுத்தியவர் முழுமையாக அவருடைய சாட்சியாக மாற்றப்பட்டுள்ளார்," என்றும், "இந்த மாற்றம் கிறிஸ்தவப் பணியின் மையமாக உள்ளது" என்றும் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.

அடுத்து கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் வாரம் குறித்து நினைவுகூர்ந்த திருத்தந்தை, "திருஅவைக்குள் உள்ள பிளவுகளை வெல்ல வேண்டும்" என்று அழைப்பு விடுத்த அதேவேளை, "இன்னும் ஒளிர்ந்திடும் கிறிஸ்துவின் ஒளி, பிரிவினைகள் அனைத்தையும் அணைத்துவிடும்" என்று குறிப்பிட்டார்.

மேலும் கிறிஸ்தவ ஒன்றிப்பின் வலிமை வாய்ந்த அடையாளமான நீசேயா திருச்சங்கத்தின் நம்பிக்கை அறிக்கையின் அண்மைய 1700-வது ஆண்டு நிறைவிழா கொண்டாட்டம் குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

"ஒரே கடவுள், ஒரே ஆண்டவர், ஒரே தூய ஆவி" என்ற பொதுவான நம்பிக்கையை கிறிஸ்தவர்கள் நினைவில் கொள்ளுமாறு ஊக்குவித்த திருத்தந்தை, வெவ்வேறு கிறிஸ்தவக் குழுக்களிடையே திறந்த விவாதங்களின் முக்கியத்துவத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.

இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கொண்டாட்டத்தில்  பேராயர் காஜாக் பர்சாமியன் (Khajag Barsamian) மற்றும் ஆயர் அந்தோணி பால் (Anthony Ball) போன்ற கிறிஸ்தவத் தலைவர்களின் ஈடுபாட்டை அங்கீகரித்தார் திருத்தந்தை.

இறுதியாக, கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவித்த ஆர்மீனியத் தலைவரான புனித நெர்சஸ் ஷ்னோர்ஹாலியைப் (Nersès Šnorhali) பாராட்டிய திருத்தந்தை, கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக அதனை  அங்கீகரித்தார்.

"நற்செய்தியைப் பரப்புவதற்கு ஒன்றிப்பு அவசியம்" என்றும், "ஒன்றிப்பு, அமைதி மற்றும் இம்மண்ணகத்தில் கிறிஸ்துவின் பணியை நிறைவேற்ற அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்றும் வலியுறுத்தி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஜனவரி 2026, 11:53