விசுவாசத்திலும் கிறிஸ்துவின் ஒளியிலும் நிலைத்திருங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"மனித வரலாற்றில் இறைவன் நுழையும் போது, அவர் ஒவ்வொருவரையும் திறந்த மற்றும் பணிவான இதயத்துடன் சந்திக்கிறார்" என்றும், "அவர் நம்மைப் பார்த்து அன்புடன் பேசுகிறார், மீட்பிற்கான வழியை நமக்குக் காட்டுகிறார்" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜனவரி 11, ஞாயிறன்று, திருஅவையில் ஆண்டவருடைய திருமுழுக்குப் பெருவிழா சிறப்பிக்கப்பட்ட வேளை, வத்திகானிலுள்ள சிஸ்டைன் பேராலயத்தில் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கும் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.
திருமுழுக்கின் வழியாக மனிதகுலம் மீட்படைகிறது
தனது மறையுரையில், திருமுழுக்கின் ஆழமான ஆன்மிக முக்கியத்துவத்தைக் குறித்து எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "திருமுழுக்கின் வழியாக, இயேசு மனிதகுலத்திற்கு கடவுளின் மீட்பளிக்கும் அருளைக் கொண்டு வருகிறார்" என்றும், "வாழ்க்கை மற்றும் மீட்பில் ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறார்" என்றும் வலியுறுத்தினார்.
யோர்தான் ஆற்றில் இயேசு பெற்ற திருமுழுக்கு எவ்வாறு பணிவின் அடையாளமாக மட்டுமல்லாமல், அதைப் பெறும் அனைவரையும் புனிதப்படுத்தும் இறை நீதியின் ஆழமான தருணமாகவும் அமைந்திருந்தது என்பதை விசுவாசிகளுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை.
உங்கள் குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்த்திடுங்கள்
தங்கள் குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து அவர்களின் பெற்றோரிடம் கோடிட்டுக் காட்டிய திருத்தந்தை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் உடைகளைப் பூர்த்தி செய்வதில் அளிக்கும் அக்கறையுடன் அதை ஒப்பிட்டுக் காட்டினார்
கடவுளுடன் நிறைவான வாழ்க்கைக்கு நம்பிக்கை மிகவும் அவசியமானத் தேவை என்பதை விசுவாசிகளுக்கு நினைவூட்டிய திருத்தந்தை, திருமுழுக்கு என்பது ஒரு தனிப்பட்ட செயல் மட்டுமல்ல, திருஅவைக்குள் குடும்பங்களை ஒன்றிணைக்கும் ஒரு கூட்டுச் செயல் என்பதையும் வலியுறுத்தினார்.
திருமுழுக்கின் வலிமை வாய்ந்த 3 அடையாளங்கள்
திருமுழுக்கின் வலிமை வாய்ந்த அடையாளங்களான புனிதப்படுத்தும் தண்ணீர், வெண்ணிற ஆடை மற்றும் மெழுகுவர்த்தி குறித்து எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இந்தப் பொருள்கள் ஒவ்வொன்றும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மாற்றமளிக்கும் ஆற்றலையும், அது அனைத்து விசுவாசிகளுக்கும் வழங்கும் நிலைவாழ்வுக்குரிய நம்பிக்கையையும் குறிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, வாழ்நாள் முழுவதும் கடவுள் தங்களை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையுடன், விசுவாசத்தில் தொடர்ந்து பயணிக்குமாறு விசுவாசிகளை ஊக்குவித்து தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
