தேடுதல்

ஆயுதங்களற்ற, ஆயுதங்களைக் களைந்த அமைதிக்கு திருத்தந்தை அழைப்பு!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தனது மறையுரையில் அன்னை கன்னி மரியாவின் தாய்மைப் பண்புகள் குறித்தும், உலக அமைதி நாள் குறித்தும் தனது சிந்தனைகளை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் 

“கத்தோலிக்கர்களும் நல்லெண்ணம் கொண்ட மக்களும் பணிவு, சுதந்திரம் மற்றும் இரக்கத்தில் வேரூன்றிய அமைதியின் நோக்கத்தைத் தழுவ வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 1, வியாழக்கிழமையன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் சிறப்பிக்கப்பட்ட, ‘கன்னி மரியா கடவுளின் தாய்’ பெருவிழா மற்றும் 59-வது உலக அமைதி நாள் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

புத்தாண்டின் விடியலில், கடவுளின் தாராள அன்பு, இரக்கம் மற்றும் பதிலளிக்கும் நமது சுதந்திரத்தால், நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இருக்க முடியும் என்பதை இன்றைய வழிபாட்டு முறை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

கடவுள் அளித்த அமைதி எனும் கொடை

புதிய ஆண்டின் தொடக்கத்தில் வழிபாட்டிற்குக் கொடுக்கப்பட்ட எண்ணிக்கை நூலில் கூறப்படும் ஆசீர்வாதங்கள் பற்றி தனது விவிலிய சிந்தனைகளை வெளிப்படுத்திய திருத்தந்தை, விடுதலைப் பெற்ற மக்களுக்கு கடவுள் அளித்த கொடை அமைதி என்பதை எடுத்துக்காட்டினார்.

எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலைப் பெற்ற இஸ்ரயேல் மக்கள், எவ்வாறு பொருள் பாதுகாப்பை இழந்து, எதிர்காலத்திற்கான சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் பெற்றனர் என்பதை நினைவு கூர்ந்த திருத்தந்தை, இந்தக் கருப்பொருள் இன்றும் பொருத்தமானதாக இருப்பதாகக் கூறினார்.

ஒரு திறந்த பயணமாகக் காணுங்கள்

கடவுளின் இரக்கம் மற்றும் மனித சுதந்திரத்தால் சாத்தியமான "ஒரு திறந்த பயணமாக" புத்தாண்டைக் கண்டுகொள்வதற்கு விசுவாசிகளை அழைத்த திருத்தந்தை, கடவுளின் நெருக்கத்திலும் நன்மையிலும் நம்பிக்கையுடன் வாழும்போது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் என்று கூறினார்.

வலுவின்மையில் வெளிப்பட்ட கடவுள்

மரியாவின் தெய்வீகத் தாய்மையின் பெருவிழாக் குறித்துச் சிந்தித்த திருத்தந்தை, கடவுளுக்கு "ஆம்" என்று அவர் கூறியதன் வழியாக, கடவுளின் இரக்கத்திற்கு மனித முகத்தைக் கொடுப்பதில் மரியாவின் பங்களிப்பை வலியுறுத்தியதுடன், இயேசுவில், கடவுள் தன்னை அதிகாரம் அல்லது வலிமையால் அல்ல, மாறாக வலுவின்மை மற்றும் அன்பின் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று மொழிந்தார்.

ஆயுதங்களற்ற மற்றும் ஆயுதங்களைக் களைந்த கடவுள்

உலக அமைதி நாளை நினைவுகூர்ந்து கடவுளை ஆயுதங்களற்றவராகவும் ஆயுதங்களைக் களைந்தவராகவும் விவரித்த திருத்தந்தை, கிறிஸ்துவை பாதுகாப்பற்ற புதிதாகப் பிறந்த குழந்தையுடன் ஒப்பிட்டு, உலகம் வன்முறை, தீர்ப்பு அல்லது அடக்குமுறையால் காப்பாற்றப்படவில்லை, மாறாக புரிதல், மன்னிப்பு, விடுதலை மற்றும் வரவேற்பால் காப்பாற்றப்படுகிறது என்று கற்பிக்கிறார் என்றும் எடுத்துக்காட்டினார்.

ஆயுதமற்ற அன்பின் முன்மாதிரி மரியா

இந்த "ஆயுதமற்ற" அன்பின் ஒரு முன்மாதிரியாக மரியாவை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அவர் தனது வாழ்க்கையை கடவுளுக்கு சுதந்திரமாக வழங்கினார், எதிர்பார்ப்புகளையும் ஆறுதல்களையும் துறந்தார், பெத்லகேமிலிருந்து சிலுவை மற்றும் உயிர்த்தெழுதல் வரை தனது மகனைப் பணிவுடன் பின்பற்றினார் என்பதைக் குறிப்பிட்டார்.

மேலும் அன்னை கன்னி மரியாவினுடைய தாய்மையில், தெய்வீகத் தற்கையளிப்பும் மனித சுதந்திரமும் ஒரு முழுமையான அன்பின் செயலில் சந்திக்கின்றன என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

புதிதாய்ப் புறப்படுங்கள்

புனித அகுஸ்தினார் மற்றும் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் இருவரையும் மேற்கோள் காட்டி, மனுவுருவெடுத்தலின் பணிவு விசுவாசிகளை நம்பிக்கை மற்றும் அமைதியின் சாட்சிகளாக மாற்றுகிறது என்பதை நினைவு கூர்ந்த திருத்தந்தை, கிறிஸ்துவுடனான சந்திப்பு தங்கள் வாழ்க்கையையும் கலாச்சாரங்களையும் புதுப்பிக்க அனுமதிக்குமாறு கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார்.

எதிர்நோக்கின் யூபிலி ஆண்டு நிறைவடையும் வேளையில், இயேசுவின் பிறப்பு விழாவை உண்மையான அமைதி மற்றும் ஆசீர்வாதத்தின் இடமாக அணுகுமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, வரும் ஆண்டில், "கடவுளை மாட்சிமைப்படுத்திப் புகழ்ந்து", இரக்கம் மற்றும் அமைதியால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை மூலம் நற்செய்திக்குச் சான்று பகர்ந்து, புதிதாகப் புறப்பட வேண்டும் என்று விசுவாசிகளை வலியுறுத்தி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஜனவரி 2026, 11:54