புனித பேதுரு பெருங்கோவிலில் புனிதக் கதவு மூடப்பட்டது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 2024-ஆம் ஆண்டு, டிசம்பர் 24-ஆம் தேதியன்று தொடங்கிய யூபிலி ஆண்டின் அதிகாரப்பூர்வ முடிவைக் குறிக்கும் வகையில், ஜனவரி 06, செவ்வாய்க்கிழமையன்று, புனித பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவை மூடினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த வழிபாட்டுச் சடங்கு ஜனவரி 06, செவ்வாய்க்கிழமை ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழாவன்று, காலை 9:30 மணிக்கு இடம்பெற்று, உரோமை நகர் முழுவதும் யூபிலி கொண்டாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது.
உரோமை நகரிலுள்ள புனித இலாத்தரன், புனித மேரி மேஜர், புனித பவுல் ஆகிய மூன்று பெருங்கோவில்களின் புனிதக் கதவுகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், கடைசியாக புனித பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவு நேற்று மூடப்பட்டது.
1975-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு நடைமுறையைப் பின்பற்றி, பின்னர் 2000-மாம் ஆண்டு மாபெரும் யூபிலி விழாவின் போது திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் எளிமைப்படுத்தப்பட்டது. அதாவது, முந்தைய விழாக்களில் இருந்த பொதுச் சுவர் எழுப்புதல் அலங்காரம் இல்லாமல், வெண்கலக் கதவு பலகைகளை அடையாளமாக மூடும் வரம்பு நிலைக்கு மாற்றப்பட்டது.
இத்திருச்சடங்கின் போது, திருத்தந்தை பொதுக் காலத்திற்குரிய புனித ஆண்டுக்கான நன்றி செலுத்தும் இறைவேண்டலை வாசித்தார். அதிகாரப்பூர்வ வாய்ப்பாட்டில் (official formula)"இந்தப் புனிதக் கதவு மூடப்பட்டுள்ளது, ஆனால் உமது இரக்கத்தின் கதவு மூடப்படவில்லை" என்ற வார்த்தைகள் உள்ளன.
பின்னர், இறையருளின் கருவூலங்கள் திறந்தே இருக்க வேண்டும் என்றும், இதனால் விசுவாசிகள் தங்கள் மண்ணகத்துக்குரிய திருப்பயணத்தின் முடிவில், "உமது விண்ணகக் கதவை நம்பிக்கையுடன் தட்டி, நிலைவாழ்வுக்குரிய மரத்தின் கனிகளை சுவைத்து மகிழட்டும்" என்றும் வேண்டிக்கொண்டார் திருத்தந்தை.
"தாவீதின் திறவுகோலே" (O clavis David) என்ற பல்லவி (முன்மொழி) பாடப்பட்டபோது, திருத்தந்தை புனிதக் கதவை நெருங்கி, அதன் நுழைவாயிலில் நுழைந்து, மண்டியிட்டு, இரண்டு பெரிய வெண்கலக் பலகைகளையும் (bronze leaves) மூடினார். இந்த அடையாளம் யூபிலி காலத்தின் முடிவைக் குறிக்கிறது, அதேவேளையில், கடவுளின் இரக்கத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
புனிதக் கதவு மூடப்பட்ட உடனேயே, புனித பேதுரு பெருங்கோவிலில் ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழாவிற்கான திருப்பலிக்குத் தலைமை தாங்கினார் திருத்தந்தை.
புனிதக் கதவை முத்திரையிடும் திருச்சடங்கு ஏறத்தாழ பத்து நாட்களுக்குப் பிறகு தனிப்பட்ட முறையில் நடைபெறும். சுவர் எழுப்பும் திருச்சடங்கை திருத்தந்தையின் வழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான அலுவலகம் மேற்பார்வையிடும். அதனைத் தொடர்ந்து, புனித பேதுருவின் பெருங்கோவில் பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் அதன் உள்ளே ஒரு செங்கல் சுவரைக் கட்டுவார்கள்.
இந்தத் தனிப்பட்ட திருச்சடங்கின்போது, ஒரு பாரம்பரிய உலோகச் சிறுபெட்டி அல்லது குப்பிகள் சுவருக்குள் வைக்கப்படும். அதில் புனிதக் கதவு மூடப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ பதிவு, யூபிலி ஆண்டில் அச்சிடப்பட்ட நாணயங்கள் மற்றும் புனிதக் கதவின் சாவிகள் ஆகியவை இருக்கும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
