ஸ்லோவேனியா ஆயர்களுக்குத் திருத்தந்தையின் அத் லிமினா உரை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"உங்கள் நாட்டிலும் உலகெங்கிலும் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் உங்கள் அயராத அர்ப்பணிப்புக்கு எனது நன்றி, இது பெரும்பாலும் உங்கள் அமைதியான ஆனால் அர்த்தமுள்ள உடனிருப்பு வழியாகக் காட்டப்படுகிறது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆயர்கள் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையை சந்தித்து, தங்கள் மறைமாவட்டங்களின் நிலவரம் பற்றி அறிவிக்கும் அத் லிமினா நிகழ்வையொட்டி, ஜனவரி 16, வெள்ளியன்று, காலை 09.00 மணியளவில், ஸ்லோவேனியாவின் ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.
தனது அத் லிமினா உரையில், ஸ்லோவேனியாவின் வளமான கிறிஸ்தவப் பாரம்பரியத்தைப் பாராட்டிய திருத்தந்தை, நாட்டின் ஆன்மிக, கலாச்சார மற்றும் கல்வி வாழ்க்கைக்கு அதன் பங்களிப்புகளைக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, குடும்பங்கள், இளைஞர்கள், நோயாளர்கள் மற்றும் தேவையில் இருப்போருக்கு அர்ப்பணிப்புடன் மேய்ப்புப் பணியாற்றியதற்காகவும், கிறிஸ்துவின் அன்பிற்கு உயிர்த்துடிப்புள்ள சான்றுகளாக அவர்களின் பணியை எடுத்துக்காட்டுவதற்காகவும், ஆயர்களுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை.
போர், சமூக அச்சங்கள் மற்றும் மாறிவரும் மேய்ப்புப் பணி கட்டமைப்புகள் உள்ளிட்ட சமகால சவால்களுக்கு மத்தியில், வலிமை, துணிவு மற்றும் நம்பிக்கையின் ஆதாரமாக திருஅவைக்குள் ஒன்றிப்பின் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு வலியுறுத்தினார் திருத்தந்தை.
நம்பிக்கையுடன் பணியாற்ற ஆயர்களை ஊக்குவித்த திருத்தந்தை, ஸ்லோவேனிய தலத்திருஅவையை அன்னை புனித கன்னி மரியா மற்றும் உள்ளூர் புனிதர்களின் பாதுகாப்பில் ஒப்படைத்து இறைவேண்டல் செய்தார்.
இறுதியாக, நம்பிக்கை மற்றும் அமைதியின் அடையாளமாக, அனைத்து விசுவாசிகள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் குடும்பங்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது அத் லிமினா உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
