தேடுதல்

திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை

இயேசு நம்மை அவருடைய நண்பர்களாக இருக்க அழைத்தால், இந்த அழைப்பை கேட்டும் அதனை விட்டுவிடாமல் இருக்க முயற்சிப்போம். அவ்வழைப்பை வரவேற்போம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 28, புதன்கிழமை, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கம் ஏறக்குறைய 7,000-க்கும் மேற்பட்ட திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. ‘இறை வெளிப்பாடு’ (Dei Verbum) குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஆவணத்தின் தொடர்ச்சியாக, "திருமறைநூலிற்கும் பாரம்பரியத்திற்கும் இடையிலான உறவு" என்ற தலைப்பில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. முதலில் யோவான் நற்செய்தியிலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.

அக்காலத்தில் இயேசு தன் சீடர்களிடம் கூறியதாவது: "உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்" என்றார். (யோவா 14:25-26)

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்! ‘இறை வெளிப்பாடு’ (Dei Verbum) குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஆவணம் பற்றிய நமது சிந்தனைகளின் தொடர்ச்சியாக, இன்று நாம், திருமறைநூலிற்கும் பாரம்பரியத்திற்கும் இடையிலான உறவைப் பற்றி சிந்திக்கிறோம்.

இரண்டு நற்செய்தி காட்சிகளை நாம் பின்னணியாக எடுத்துக் கொள்ளலாம். முதலாவதாக, மேல் மாடி அறையில், இயேசு, சீடர்களுக்கு வழங்கிய தனது சிறந்த பிரியாவிடை உரையில், இவ்வாறு கூறுகிறார்: "உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்." மேலும் "உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார் (யோவா 14:25-26; 16:13).

அதற்கு பதிலாக, இரண்டாவது காட்சி நம்மை கலிலேயா மலைகளுக்கு அழைத்துச் செல்கிறது. உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களுக்குத் தோன்றினார், அவர்கள் வியப்பும் சந்தேகமும் கொண்டனர். மேலும் அவர்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறார் இயேசு: "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்" (மத் 28:19-20). இந்த இரண்டு காட்சிகளிலும், கிறிஸ்து பேசிய வார்த்தைக்கும் பல நூற்றாண்டுகளாக அது பரவுவதற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு தெளிவாகத் தெரிகிறது.

இதைத்தான் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம், கவனத்தை ஈர்க்கும் ஒரு காட்சி வழியாக உறுதிப்படுத்துகிறது. அதாவது, “மறைநூலும் புனித பாரம்பரியமும் நெருக்கமாகத் தொடர்புடையவை மற்றும் அவை ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன" என்கிறது.  ஏனென்றால், ஒரே இறை ஊற்றிலிருந்து பாயும் அவை இரண்டும் ஏதோ ஒரு வகையில் ஒன்றிணைந்து ஒரே நோக்கத்தை உருவாக்கி ஒரே இலக்கை நோக்கி நகர்கின்றன” (DV, 9). திருஅவைசார் பாரம்பரியம் வரலாற்றின் போக்கில் திருஅவை வழியாக வெளிப்படுகிறது, இது கடவுளின் வார்த்தையைப் பாதுகாக்கிறது, விளக்குகிறது மற்றும் உள்ளடக்குகிறது. கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்விப் பாடம் (cf. எண். 113) இது தொடர்பாக திருஅவைத் தந்தையர்களின் ஒரு கூற்றைக் குறிப்பிடுகிறது: "திருவிவிலியம் பொருள் கருவிகளில் எழுதப்படுவதற்கு முன்பு திருஅவையின் இதயத்தில் எழுதப்பட்டுள்ளது," அதாவது புனித நூலில்.

மேலே குறிப்பிடப்பட்ட கிறிஸ்துவின் வார்த்தைகளைப் பின்பற்றி, "தூய ஆவியின் உதவியுடன் திருஅவையில் அப்போஸ்தலிக்கப் பாரம்பரியம் முன்னேறுகிறது" (DV, 8) என்று பொதுச் சங்கம் உறுதிப்படுத்துகிறது. இது "விசுவாசிகளின் சிந்தனை மற்றும் படிப்பு" மூலம் முழுமையான புரிதல் மூலம், "ஆன்மிக எதார்த்தங்களைப் பற்றிய ஆழமான புரிதலில்" இருந்து எழும் அனுபவம் மூலம், எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மையின் உறுதியான தனிவரத்தைப் பெற்ற திருத்தூதர்களின் வாரிசுகளின் போதனையின் மூலம் நடைபெறுகிறது. சுருக்கமாக, "திருஅவை, அதன் கோட்பாடு, வாழ்க்கை மற்றும் வழிபாட்டில், தான் என்னவாக இருக்கிறதோ, தான் எதை நம்புகிறதோ அவை அனைத்தையும், ஒவ்வொரு தலைமுறைக்கும் வழங்குகிறது" (ibid).

இந்தப் பார்வையில், "மறைநூல் அதைப் படிப்பவர்களுடன் வளர்கிறது." என்று திருத்தந்தை புனித பெரிய கிரிகோரியார் கூறியது நன்கு அறியப்பட்டதாகும். மேலும் புனித அகுஸ்தினார் ஏற்கனவே "அனைத்துத் திருமறைநூலும் கடவுளின் ஒரே ஓர் உரையாடலில் விரிவடைகிறது, மேலும் பல புனிதர்களின் உதடுகளில் ஒலிக்கும் ஒரே ஒரு வார்த்தை உள்ளது" என்று உறுதிப்படுத்தியிருந்தார். எனவே, கடவுளின் வார்த்தை புதைபடிவமாக இல்லை, ஆனால் அது மரபிற்குள் வளர்ந்து வளரும் ஓர் உயிருள்ள மற்றும் இயற்கை எதார்த்தமாகும். பிந்தையது,  தூய ஆவியின் உதவியுடன், அது இந்த உண்மையை முழுமையாகப் புரிந்துகொண்டு, வரலாற்றின் மாறிவரும் சூழ்நிலைகளுக்குள் அதை வாழ்கிறது.

இந்த வகையில், திருஅவையின் மறைவல்லுநர் புனித ஜான் ஹென்றி நியூமன் தனது "கிறிஸ்தவ கோட்பாட்டின் வளர்ச்சி குறித்த கட்டுரை" என்ற படைப்பில் முன்மொழிந்தது குறிப்பாகத் தூண்டுதலாக உள்ளது. விதைப்பவர் உவமையில் இயேசு சுட்டிக்காட்டியுள்ளபடி (மாற்கு 4:26–29): ஓர் உள்ளுயிர் ஆற்றலின்  காரணமாக வளரும் ஓர் உயிருள்ள எதார்த்தம், ஒரு கூட்டு அனுபவமாகவும், கோட்பாடாகவும் கிறிஸ்தவம் ஒரு மாறும் எதார்த்தம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

"திமொத்தேயு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாப்பாயாக" (1 திமொ 6:20; ஒப் 2 திமொ1:12, 14) என்று திருத்தூதர் புனித பவுல் தனது சீடரும் உடனுழைப்பாளருமான  திமொத்தேயுவிடம்  மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறார்.  திருமறைநூல் மற்றும் திருஅவை பாரம்பரியம் இரண்டும் கடவுளின் செய்தியைக் கொண்டுள்ளன என்று திருஅவைக் கற்பிக்கிறது. திருஅவை, தூய ஆவியால் வழிநடத்தப்பட்டு, இயேசுவின் நாமத்தில் இந்தச் செய்தியை விளக்கி கற்பிக்கிறது (DV எண். 10). 'பாதுகாப்பு' (deposit) என்பது முதலில் ஒரு சட்டப்பூர்வ சொல், அதைப் பெறுபவர் அதைப் பாதுகாத்து மாற்றமின்றி அனுப்ப வேண்டும். இந்த நோக்கில், 'பாதுகாத்துக்கொள்வது' என்பது நம்பிக்கை."

கடவுளுடைய வார்த்தையின் 'பாதுகாப்பு' இன்றும் திருஅவையின் கைகளில் உள்ளது, மேலும் நாம் அனைவரும், நமது பல்வேறு திருஅவைசார் பணிகளில், வரலாற்றின் சிக்கலான தன்மை மற்றும் மனித இருப்புக்கு மத்தியில் நமது பயணத்திற்கான ஒரு வழிகாட்டும் விண்மீனாக, அதன் ஒருமைப்பாட்டில் தொடர்ந்து அதைப் பாதுகாக்க வேண்டும்.

இறுதியாக, அன்பான சகோதரர் சகோதரிகளே, திருமறைநூல்கள் மற்றும் புனித பாரம்பரியத்தின் பின்னிப்பிணைப்பை உயர்த்தும் இறை வெளிப்பாட்டை (Dei Verbum)  மீண்டும் ஒருமுறை கேட்போம்: "அவை மிகவும் இணைக்கப்பட்டு ஒன்றோடொன்று சேர்க்கப்பட்டுள்ளன," என்று அது உறுதிப்படுத்துகிறது, "ஒன்று மற்றொன்று இல்லாமல் நிற்க முடியாது, மேலும் ஒன்றாக, ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில், ஒரே தூய ஆவியின் செயல்பாட்டின் கீழ், அவை ஆன்மாக்களின் மீட்பிற்குத் திறம்பட பங்களிக்கின்றன" (எண். 10).

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஜனவரி 2026, 11:35