திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை

இயேசு நம்மை அவருடைய நண்பர்களாக இருக்க அழைத்தால், இந்த அழைப்பை கேட்டும் அதனை விட்டுவிடாமல் இருக்க முயற்சிப்போம். அவ்வழைப்பை வரவேற்போம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 21, புதன்கிழமை, வத்திகானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கம் ஏறக்குறைய 7,000-க்கும் மேற்பட்ட திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. ‘இறை வெளிப்பாடு’ (Dei Verbum) குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஆவணத்தின் தொடர்ச்சியாக, "இறைத்தந்தையை வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்து" என்ற தலைப்பில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. முதலில் யோவான் நற்செய்தியிலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.

அக்காலத்தில் இயேசு தன் சீடர்களிடம் கூறியதாவது: "வழியும் உண்மையும் வாழ்வும் நானே.* என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. “நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்றார். அப்போது பிலிப்பு, அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்" என்றார். (யோவா 14:6-9)

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

‘இறை வெளிப்பாடு’ (Dei Verbum) குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஆவணம் குறித்த நமது சிந்தனைகளை இவ்வாரமும் தொடர்வோம். கடவுள் ஓர் உடன்படிக்கை உரையாடலில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்றும், அதில் அவர் நம்மை நண்பர்கள் என்று அழைக்கிறார் என்றும் நாம் கண்டோம். எனவே இது ஓர் உறவுமுறை சார்ந்த அறிவு வடிவமாகும், இது கருத்துக்களை மட்டும் தொடர்பு கொள்ளாமல், ஒரு வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறது மற்றும் ஒருவருக்கொருவர்மீதான உறவு ஒன்றிப்புக்கு அழைப்பு விடுகிறது.

இந்த வெளிப்பாட்டின் நிறைவு ஒரு வரலாற்று மற்றும் தனிப்பட்ட சந்திப்பில் நடைபெறுகிறது, அதில் கடவுள் தன்னையே நமக்குக் கொடுத்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். மேலும் நாம் நமது உண்மையின் ஆழத்தில் அறியப்பட்டுள்ளோம் என்பதைக் கண்டறிகிறோம். இதுதான் இயேசு கிறிஸ்துவில் நிகழ்ந்தது. “கடவுளைப் பற்றியும் மனிதரின் மீட்புப் பற்றியும் ஆழமான உண்மை கிறிஸ்துவில் நமக்கு ஒளிர்கிறது, அதேவேளையில், அவர் அனைத்து வெளிப்பாட்டின் இடையீட்டாளராகவும் முழுமையாகவும் இருக்கிறார்” (DV, 2) என்று இந்த ஆவணம் கூறுகிறது .

இயேசு தந்தையுடனான தனது சொந்த உறவில் நம்மை ஈடுபடுத்துவதன் வழியாக அவரை நமக்கு வெளிப்படுத்துகிறார். தந்தையாகிய கடவுளால் அனுப்பப்பட்ட மகன் இயேசுவில், "மனிதர்கள் தூய ஆவியில் தந்தையை அணுக முடியும் மற்றும்  இறை இயல்பில் பங்காளிகள் ஆக்கப்படுகிறார்கள்" (ibid). இவ்வாறு, ஆவியானவரின் செயலின் வழியாக, திருமகனும் அவருடைய தந்தையும் கொண்ட உறவுக்குள் நுழைவதன் மூலம், நாம் கடவுளைப் பற்றிய முழு அறிவைப் பெறுகிறோம். எடுத்துக்காட்டாக, நற்செய்தியாளர் லூக்கா இயேசுவினுடைய பேருவகை நிறைந்த இறைவேண்டலைப்  பற்றி நமக்குச் சொல்லும்போது இதை உறுதிப்படுத்துகிறார்: அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்” என்றார். “என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார் (லூக் 10:21–22)

நாம் கடவுளை அவரால் அறியப்பட்டபடியே அறிவோம் (காண்க. கலா 4:9; 1 கொரி 13:13). உண்மையில், கிறிஸ்துவில் கடவுள் தம்மை நமக்குத் தெரிவித்திருக்கிறார், அதேவேளையில், வார்த்தையின் சாயலில் படைக்கப்பட்ட குழந்தைகளாகிய நமது உண்மையான அடையாளத்தை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். இந்த "முடிவில்லாத வார்த்தை எல்லா மனிதர்களுக்கும் அறிவொளியூட்டுகிறது" (DV, 4), தந்தையின் பார்வையில் அவர்களின் உண்மையை வெளிப்படுத்துகிறது: "மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்" (மத் 6:4, 6, 8), என்று இயேசு கூறுகிறார்; மேலும் "உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்" (மத் 6:32) என்றும் அவர் மொழிகின்றார்.

இயேசு கிறிஸ்துவே நாம் தந்தையாகிய கடவுளின் உண்மையை அடையாளம் கண்டுகொள்ளும் இடம். அதேவேளையில், திருமகனில் குழந்தைகளாக நாம் அவரால் அறியப்படுகிறோம், முழுமையின் அதே இலக்குக்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைக் கண்டறியும் இடமாகும். "காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே’ எனக் கூப்பிடுகிறது" (கலா 4:4–6). என்று புனித பவுலடியார் எழுதுகிறார்.

இறுதியாக, இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த மனித இயல்பின் வழியாக இறைத்தந்தையை  வெளிப்படுத்துபவர். மனிதரிடையே வாழும் மனுவுருவெடுத்த வார்த்தையாக இயேசு இருப்பதால்தான், அவர் தம்முடைய உண்மையான மற்றும் முழுமையான மனித இயல்பின் வழியாக கடவுளை நமக்கு வெளிப்படுத்துகிறார்: “ஆகையால், தந்தையைக் காணும் ஒருவரைப் பார்த்து (“என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்” யோவா 14:9), அவருடைய முழு இருப்பு மற்றும் சுய வெளிப்பாட்டுடன், வார்த்தைகள் மற்றும் செயல்கள், அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள், குறிப்பாக, அவரது இறப்பு மற்றும் இறந்தோரிலிருந்து மாட்சிமிகு உயிர்த்தெழுதல், இறுதியாக உண்மையின் துணையாளரை (தூய ஆவி) அனுப்புதல் ஆகியவற்றுடன், வெளிப்பாட்டை நிறைவுசெய்து, அதை நிறைவேற்றுகிறது” (DV, 4).

கிறிஸ்துவில் கடவுளை அறிய நாம் அவருடைய ஒருங்கிணைந்த மனித இயல்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்: இயேசுவின் மனித இயல்பின் நேர்மை தெய்வீகக் கொடையை முழுமையைக் குறைக்காதது போல, மனிதரிலிருந்து ஏதாவது பறிக்கப்படும் இடத்தில் கடவுளின் உண்மை முழுமையாக வெளிப்படுத்தப்படுவதில்லை. இயேசுவின் ஒருங்கிணைந்த மனித இயல்புதான், இறைத்தந்தையின் உண்மையை நமக்குச் சொல்கிறது.  “கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்” (காண். யோவா 1:18).

நம்மைக் காப்பாற்றி ஒன்றாக அழைப்பது இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் மட்டுமல்ல, அவருடைய தனிப்பட்ட ஆளுமையும் கூட: மனுவுருவெடுத்து பிறக்கிறார், குணப்படுத்துகிறார், கற்பிக்கிறார், துன்புறுகிறார், இறக்கிறார், உயிர்த்தெழுகிறார், நம்மிடையே இருக்கிறார். எனவே, மனுவெடுத்தலின் மகத்துவத்தை உண்மையிலேயே மதிக்க, இயேசுவை வெறும் கருத்துக்களைக் கற்பித்த ஒருவராகப் பார்ப்பது போதாது, இயேசுவுக்கு உண்மையான மனித உடல் இருந்ததால், கடவுளின் உண்மை அந்த உடல் மூலம் காட்டப்படுகிறது, அதாவது, இயேசு உலகை எவ்வாறு பார்க்கிறார், உணர்கிறார், வாழ்கிறார் மற்றும் அதன் வழியாக நகர்கிறார் என்பதன் மூலம். இயேசுவே நம்மை எதார்த்தத்தைப் பற்றிய தனது பார்வையைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறார்: “வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!” (மத் 6:26).

சகோதரர் சகோதரிகளே, இயேசுவின் பாதையை இறுதிவரை பின்பற்றுவதன் வழியாக, கடவுளின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்ற உறுதியை நாம் அடைகிறோம்: "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?" (உரோ 8:31–32) என்கிறார் புனித பவுலடியார். இயேசுவின் வழியாக, கிறிஸ்தவர்கள் தந்தையாகிய கடவுளை அறிந்து, அவரிடம் நம்பிக்கைக்கொள்கிறார்கள். இயேசுவுக்கு நன்றி!

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜனவரி 2026, 12:40