திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜனவரி 14, புதன்கிழமை, வத்திகானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கம் ஏறக்குறைய 7,000-க்கும் மேற்பட்ட திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. கடந்த வாரம் போலவே, திருத்தந்தையின் இவ்வார புதன் மறைக்கல்வி உரை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெறவில்லை. சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. முதலில் யோவான் நற்செய்தியிலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.
அக்காலத்தில் இயேசு தன் சீடர்களிடம் கூறியதாவது: "இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில், என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்" (யோவா 15:15)
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்
அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, காலை வணக்கம்!
இரண்டாம் வத்திக்கான் குறித்த மறைக்கல்வித் தொடர் ஒன்றைக் கடந்த வாரம் தொடங்கினோம். இந்நாளில் நாம் ‘இறை வெளிப்பாடு’ (Dei Verbum) குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஆவணம் பற்றி இன்னும் ஆழமாக ஆராயத் தொடங்குகிறோம். இது இப்பொது சங்கத்தின் மிக அழகான மற்றும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும், இது நாம் சற்று முன்பு யோவான் நற்செய்தியிலிருந்து கேட்ட இயேசுவின் வார்த்தைகளை நினைவுபடுத்த இது நமக்கு உதவக்கூடும்.
இது கிறிஸ்தவ நம்பிக்கையின் ஓர் அடிப்படைக்கொள்கை. ‘இறை வெளிப்பாடு’ (Dei Verbum) குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஆவணம் நமக்கு நினைவூட்டுவது போல, இயேசு கிறிஸ்து கடவுளுடனான மனிதகுலத்தின் உறவை நட்பாக மாற்றுகிறார். இதன் காரணமாக, புதிய உடன்படிக்கையின் ஒரே தேவை அன்பு மட்டுமே.
“கடவுளின் அருள் மட்டுமே அவருடைய மகன் வழியாக நம்மை கடவுளின் நண்பர்களாக மாற்ற முடியும்” என்று புனித அகுஸ்தினார் விளக்குகிறார். "நட்பு சமமானவர்களைக் கண்டுபிடிக்கிறது அல்லது அவர்களை சமமாக்குகிறது" என்று ஒரு பழைய பழமொழி கூறுகிறது. நாம் கடவுளுக்குச் சமமானவர்கள் அல்ல என்பதால், கடவுள் தாமே நம்மை உயர்த்தி, தம்முடைய திருமகனில் நம்மைத் தம்மைப் போல ஆக்குகிறார்.
மறைநூல் முழுவதும், உடன்படிக்கை என்பது ஒரு தூர உணர்வோடு தொடங்குகிறது: கடவுளும் மனிதகுலமும் சமமானவர்கள் அல்ல. கடவுள் எப்போதும் உயர்வானவர்தான். நாம் அவரால் உண்டாக்கப்பட்ட படைப்புகள். ஆயினும், இயேசு மனுவுருவெடுத்தல் வழியாக, நம்மைத் தம்முடைய பிள்ளைகளாக்கி, நம்முடைய பாவம் நிறைந்த மனித இயல்பிலும் அவரைப் போல மாற அழைத்ததன் வழியாக, கடவுள் தனது உடன்படிக்கையை நிறைவேற்றினார். “நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்று பாம்பு ஏவாளிடம் சொன்னது (தொநூ 3:5). ஆனால் பாவம் செய்வதன் வழியாக அல்ல, மாறாக மனிதனாக மாறிய இயேசுவுடன் உறவை ஏற்படுத்துவதன் வழியாக நாம் கடவுளைப் போல ஆகிறோம்.
"நான் உங்களை நண்பர்கள் என்று அழைத்தேன்" என்ற இயேசுவின் வார்த்தைகள், ‘இறை வெளிப்பாடு’ (Dei Verbum) குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஆவணத்தில் எதிரொலிக்கின்றன, "இந்த வெளிப்பாட்டின் மூலம், கண்ணுக்குத் தெரியாத கடவுள் (கொலோ 1:15; 1 திமோ 1:17), தனது அன்பின் மிகுதியால், மனிதர்களிடம் நண்பர்களாகப் பேசி (விப 33:11; யோவான் 15:14-15), அவர்களிடையே வாழ்ந்து (பாரு 3:38), அவர்களைத் தன்னுடன் நெருங்கிய உறவுக்கு அழைக்கிறார் என்று அது கூறுகிறது." (எண். 2)
தொடக்க நூலின் கடவுள் ஏற்கனவே நமது முதல் பெற்றோருடன் பேசினார், அவர்களுடன் கலந்துரையாடினார் (Dei Verbum, 3); இந்த உரையாடல் அவர்களின் பாவத்தால் முறிந்தபோதும், படைப்பாளர் தனது படைப்புகளுடன் சந்திப்பைத் தேடுவதையும், அவர்களுடன் மீண்டும் மீண்டும் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்துவதையும் நிறுத்தவில்லை.
கிறிஸ்தவ வெளிப்பாட்டில், கடவுள் தம்முடைய திருமகன் மனுவுருவெடுப்பதன் வழியாக நம்மிடையே வருகிறார். இது, அவருடைய வாக்குறுதி என்றென்றும் நீடிக்கும், அவருடைய அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது என்ற கடவுளுடனான நமது உறவை மீட்டெடுக்கிறது. ஆகவே, கடவுளின் வெளிப்பாடு என்பது, நட்பின் உரையாடல் தன்மையைக் கொண்டுள்ளது, மேலும் மனித நட்பில் நடப்பது போல, அது வெறுமனே அமைதியாக இருப்பதைப் பொறுத்துக்கொள்ளாது, ஆனால் உண்மையான வார்த்தைகளின் பரிமாற்றத்தால் வளர்க்கப்படுகிறது.
கடவுள் நம்மிடம் பேசுகிறார் என்பதை ‘இறை வெளிப்பாடு’ (Dei Verbum) குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஆவணம் நமக்கு நினைவூட்டுகிறது. அர்த்தமுள்ள வார்த்தைகளுக்கும் வெற்றுப் பேச்சுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்துகொள்வது முக்கியம்.
வெற்றுப்பேச்சு மேலோட்டமாகவே இருக்கும், உண்மையான தொடர்பை உருவாக்காது, அதேவேளையில், ஓர் உறவில் உண்மையான வார்த்தைகள் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, நாம் யார் என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த வார்த்தை ஒரு வெளிப்படுத்தும் பரிமாணத்தைக் கொண்டுள்ளது. அது மற்றவருடன் ஓர் உறவை உருவாக்குகிறது. இவ்வாறு, நம்மிடம் பேசும்போது, கடவுள் தன்னை ஒரு துணையாளராக வெளிப்படுத்துகிறார், அவர் நம்மை அவருடன் நட்பு கொள்ள அழைக்கிறார்.
இந்தக் கண்ணோட்டத்தில், இறைவார்த்தை நம் மனதிலும் இதயத்திலும் ஊடுருவும் வகையில், செவிசாய்ப்பதை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதேவேளையில், நாம் கடவுளிடம் பேச அழைக்கப்பட்டுள்ளோம். அவர் ஏற்கனவே அறிந்ததை அவருக்குத் தெரிவிப்பதற்காக அல்ல, மாறாக நம்மை நமக்கு வெளிப்படுத்திக் கொள்ளவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இதனால்தான் இறைவேண்டல் மிகவும் முக்கிமானதாக உள்ளது. அது இறைவனுடன் நட்பைக் கட்டியெழுப்பவும் அதனைப் பராமரிக்கவும் நமக்கு உதவுகிறது. இது முதலில் வழிபாட்டு முறை மற்றும் குழும இறைவேண்டலில் உணரப்படுகிறது, அங்குக் கடவுளுடைய வார்த்தையிலிருந்து என்ன கேட்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை, மாறாக திருஅவையின் மூலம் நம்மிடம் பேசுபவரே அதைத் தீர்மானிக்கிறார்.
இது இதயம் மற்றும் மனதின் உட்புறத்தில் நடைபெறும் தனிப்பட்ட இறைவேண்டலிலும் நிறைவேற்றப்படுகிறது. ஒரு கிறிஸ்தவரின் அன்றாட மற்றும் வாராந்திர வாழ்க்கையில், இறைவேண்டல், தியானம் மற்றும் சிந்தனைக்கு (அகத்தூண்டல்) அர்ப்பணிக்கப்பட்ட நேரம் குறையக்கூடாது. நாம் கடவுளிடம் பேசும்போது மட்டுமே அவரைப் பற்றியும் பேச முடியும்.
நட்பு என்பது ஏதோ ஓர் உணர்ச்சிப்பூர்வமான முறிவு மூலமாகவோ அல்லது அன்றாடப் புறக்கணிப்புகள் மூலமாகவோ முடிவுக்கு வரக்கூடும். இதனால் உறவு படிப்படியாக அரிக்கப்பட்டு (பாதிக்கப்பட்டு) அது இழக்கப்படும் வரை நீடிக்கும் என்று நமது அனுபவம் கூறுகிறது.
இயேசு நம்மை அவருடைய நண்பர்களாக இருக்க அழைத்தால், இந்த அழைப்பை கேட்டும் அதனை விட்டுவிடாமல் இருக்க முயற்சிப்போம். அவ்வழைப்பை வரவேற்போம், இந்த நட்பின் உறவைப் பேணிக் காப்போம், அப்போது கடவுளுடனான நட்புதான் நமது மீட்பு என்பதைக் கண்டுபிடிப்போம்.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
