திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜனவரி 07, புதன்கிழமை, வத்திகானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கம் ஏறக்குறைய 7,000-க்கும் மேற்பட்ட திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. தொடர் மழையின் காரணமாக திருத்தந்தையின் இவ்வார புதன் மறைக்கல்வி உரை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெறவில்லை. சரியாக காலை 10 மணிக்கு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார். இந்நாளில் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் மற்றும் அதன் ஆவணங்கள் குறித்த தனது சிந்தனைகளை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ. முதலில் புனித பவுல் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.
"சகோதரர் சகோதரிகளே, உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர். பல்வேறுவகை நூதனமான போதனைகளால் கவரப்படாதீர்கள்." (எபி 13:7-9)
அன்புள்ள சகோதரர் சகோதரிகளே,
இயேசுவின் வாழ்க்கையின் மறையுண்மைகளில் நாம் கவனம் செலுத்திய யூபிலி ஆண்டுக்குப் பிறகு, இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்கும் அதன் ஆவணங்களை மீண்டும் வாசிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய மறைக்கல்வி உரை தொடரை நாம் தொடங்குகின்றோம். திருஅவையின் இந்த நிகழ்வின் அழகையும் முக்கியத்துவத்தையும் மீண்டும் கண்டறிய இது ஓர் அருமையான வாய்ப்பு. 2000-மாம் யூபிலி ஆண்டின் இறுதியில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், "20-ஆம் நூற்றாண்டில் திருஅவை பெற்ற ஒரு பெரிய இறை ஆசீராக, இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தை முன்னிலைப்படுத்துவது எனது கடமையாக நான் எப்போதும் உணர்கிறேன்" (Apostolic Letter Novo millennio ineunte, 57) என்று கூறினார்.
2025 -ஆம் ஆண்டில், நீசேயா திருச்சங்கத்தின் ஆண்டு நிறைவோடு, இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவையும் நாம் கொண்டாடினோம். இந்த நிகழ்விலிருந்து நம்மைப் பிரிக்கும் காலம் மிக நீண்டதல்ல என்றாலும், இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் காலத்தைச் சேர்ந்த ஆயர்கள், இறையியலாளர்கள் மற்றும் விசுவாசிகளின் தலைமுறை இப்போது நம்முடன் இல்லை என்பதும் உண்மை. நாம் இத்திருச்சங்கம் வழங்கும் செய்தியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, அதன் உள்ளுணர்வுகளைப் பயன்படுத்துவதற்கான வழிகளைத் தேட வேண்டும். இதைச் செய்ய, மற்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை மட்டும் நம்பி, அதன் ஆவணங்களை மீண்டும் படித்து அவற்றின் அர்த்தத்தைப் பற்றி சிந்திப்பதன் வழியாக அல்ல, அதை நாமே கவனமாகப் படிப்பதன் வழியாக. உண்மையில், இதுவே இன்றும் திருஅவையின் பயணத்தில் வழிகாட்டும் விண்மீனாக விளங்கும் ஆசிரியம் (படிப்பினைகள்) ஆகும்.
"ஆண்டுகள் கடந்தும், ஆவணங்கள் அவற்றின் பொருத்தத்தை இழக்கவில்லை; அவற்றின் படிப்பினைகள் திருஅவை மற்றும் இன்றைய உலகமயமாக்கப்பட்ட சமூகம் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் தொடர்பாக, குறிப்பாக மிகவும் பொருத்தமானவை என்பதை நிரூபிக்கின்றன" என்று முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் கற்பித்தார் (First Message after the Mass with the Electors of the Cardinals, April 20, 2005). 1962-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் அவர்கள், இந்தத் திருச்சங்கத்தின் முதன்மைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தபோது, “முழு திருஅவைக்கும் இது ஒரு புதிய, ஒளிமயமான நேரத்தின் தொடக்கமாக இருக்கும்” என்று கூறினார். இதில் உலகம் முழுவதிலுமிருந்து வந்த பல அருள்பணியாளர்களின் பணி, உண்மையிலேயே ஒரு புதிய திருஅவைக்கான காலத்திற்கு வழி வகுத்தது.
20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒரு வளமான விவிலிய, இறையியல் மற்றும் வழிபாட்டுச் சிந்தனைக்குப் பிறகு, இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தில், கிறிஸ்துவில் நம்மைத் தம்முடைய குழந்தைகளாக அழைக்கும் தந்தையாக கடவுளின் முகத்தை மீண்டும் கண்டுபிடித்தது. அது கிறிஸ்துவின் ஒளியில் திருஅவையை, நாடுகளின் ஒளியாக, உறவு ஒன்றிப்பின் மறையுண்மையாக, கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையிலான ஒன்றிப்பின் அருளடையாளமாகவும் பார்த்தது.
இது ஒரு முக்கியமான வழிபாட்டுச் சீர்திருத்தத்தைத் தொடங்கி வைத்தது, மீட்பின் மறையுண்மையையும், கடவுளின் முழு மக்களின் உற்சாகமான மற்றும் உணர்வுபூர்வமான பங்கேற்பையும் மையமாகக் கொண்டிருந்தது. அதேவேளையில், உலகிற்கு நம் மனங்களைத் திறக்கவும், உரையாடல் மற்றும் கூட்டுப் பொறுப்பு மூலம் நவீன காலத்தின் மாற்றங்கள் மற்றும் சவால்களைப் புரிந்துகொள்ளவும், மனிதகுலத்திற்குத் தனது கரங்களைத் திறக்க விரும்பும் ஒரு திருஅவையாக, மக்களின் நம்பிக்கைகள் மற்றும் துயரங்களை எதிரொலிக்கவும், மேலும் நீதியான மற்றும் உடன்பிறந்த உறவுகொண்ட சமுதாயத்தை உருவாக்குவதில் ஒத்துழைக்கவும் இது நமக்கு உதவியது.
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்கு நன்றி, "திருஅவை வார்த்தையாகிறது; திருஅவை செய்தியாகிறது; திருஅவை உரையாடலாகிறது" (புனித ஆறாம் பவுல், திருத்தூது மடல், 'அவரது திருஅவை', 67), கிறிஸ்தவ ஒன்றிப்பு, மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் நல்லெண்ணம் கொண்ட மக்களுடன் உரையாடல் மூலம் உண்மையைத் தேட தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது.
இந்த மனப்பான்மை, இந்த உள் மனப்போக்குகள், நமது ஆன்மிக வாழ்க்கையையும் திருஅவையின் மேய்ப்புப் பணிக்கான செயல்பாட்டையும் வகைப்படுத்த வேண்டும், ஏனென்றால் நாம் இன்னும் ஒரு பணிக்கான கண்ணோட்டத்தில் திருஅவை சார்ந்த சீர்திருத்தத்தை முழுமையாக உணர வேண்டும். இன்றைய சவால்களை எதிர்கொள்ளும் போது, காலத்தின் அடையாளங்களின் கவனமுள்ள பொருள் விளக்குநர்களாகவும், நற்செய்தியின் மகிழ்ச்சியான அறிவிப்பாளர்களாகவும், நீதி மற்றும் அமைதியின் துணிவுமிகு சாட்சிகளாகவும் இருக்க அழைக்கப்படுகிறோம்.
பேரருள் தந்தை அல்பினோ லூசியானி, பின்னர் திருத்தந்தையான முதலாம் ஜான் பால் அவர்கள், வித்தோரியோ வேனித்தோவின் ஆயராக இருந்தபோது, "தேவைப்படுவது புதிய அமைப்புகள், முறைகள் அல்லது கட்டமைப்புகள் மட்டுமல்ல, மாறாக ஆழமான மற்றும் பரவலான புனிதத்தன்மையும் ஆகும் என்று வத்திக்கான் திருச்சங்கம் குறித்துத் தொடக்கத்தில் எழுதினார். ஒரு திருச்சங்கத்தின் நல்ல பலன்கள் என்பது, பல ஆண்டுகளுக்குப் பிறகு, சவால்களையும் சிரமங்களையும் சந்தித்த பின்னரே தெளிவாகத் தெரியும்."
எனவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியது போல், "கடவுளுக்கும், அதன் ஆண்டவர் மீதும், அவர் அன்புகூரும் அனைத்து மனிதர்கள் மீதும் அளவுக்கதிகமான அன்புகொண்ட ஒரு திருஅவைக்கும் முதன்மைத்துவத்தைக் கொடுக்க" நமக்கு உதவுகிறது (இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் 60-வது ஆண்டு நிறைவின் தொடக்கத்தில், அக்டோபர் 11, 2022 அன்று வழங்கிய மறையுரை).
சகோதரர் சகோதரிகளே, பணியின் முடிவில் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், திருச்சங்கத்தின் தந்தையர்களுக்குக் கூறியது இன்றும் நமக்கு திசைவழியாக்கத்திற்கான (orientation) அளவுகோலாக உள்ளது. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் சுருக்கப்பட்ட ஓர் அருளின் காலத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை உணர்ந்து, திருச்சங்கத்தின் முதன்மைக் கூட்டத்தை விட்டு வெளியேறி, மனிதகுலத்தைச் சந்தித்து அவர்களுக்கு நற்செய்தியின் செய்தியைக் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அவர் உறுதிப்படுத்தினார்:
கடந்த காலம்: ஏனென்றால் கிறிஸ்துவின் திருஅவை இங்கு கூடியிருக்கிறது, அதன் மரபுகள், வரலாறு, திருச்சங்கங்கள், ஆசிரியர்கள் மற்றும் புனிதர்களைச் சுமந்து செல்கிறது. நிகழ்காலம்: ஏனென்றால் நாம் இன்றைய உலகத்தை, அதன் துன்பம், வலி மற்றும் பாவத்துடன், அதன் சிறந்த சாதனைகள், மதிப்பீடுகள் மற்றும் நற்பண்புகளுடன் சந்திக்கப் போகிறோம். எதிர்காலம்: ஏனென்றால் மக்கள் அவசரமாக அதிக நீதிக்காகக் குரல் கொடுக்கிறார்கள், அமைதியை விரும்புகிறார்கள், மேலும் கிறிஸ்துவின் திருஅவை அவர்களுக்கு வழங்கக்கூடிய மற்றும் விரும்பக்கூடிய ஒரு உயர்ந்த வாழ்க்கைக்கான ஆழமான தேவையை, அதாவது, பெரும்பாலும் சொல்லப்படாத தேவையை உணர்கிறார்கள்.
நமக்கும் அதேதான். இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் ஆவணங்களை அணுகி, அதன் இறைவாக்கையும், பொருத்தத்தையும் மீண்டும் கண்டுபிடிப்பதன் வழியாக, திருஅவையினுடைய வாழ்க்கையின் வளமான பாரம்பரியத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதேவேளையில், நிகழ்காலத்தை கேள்விக்குள்ளாக்குகிறோம், அன்பு, நீதி மற்றும் அமைதியின் அரசான, இறையாட்சியின் நற்செய்தியை உலகிற்குக் கொண்டு வருவதற்காக இயங்குவதன் மகிழ்ச்சியைப் புதுப்பிக்கிறோம்.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
