பத்திரிகையாளர்களுக்கு நேர்காணல் வழங்கும் திருத்தந்தை (கோப்புப் படம்) பத்திரிகையாளர்களுக்கு நேர்காணல் வழங்கும் திருத்தந்தை (கோப்புப் படம்)   (ANSA)

கத்தோலிக்க ஊடகங்கள் ஒப்புரவையும் அமைதியையும் ஊக்குவிக்க வேண்டும்!

கத்தோலிக்க ஊடகங்களின் பணியைப் பற்றி சிந்திக்கும் பத்திரிகையாளர்களின் ஆண்டுக் கூட்டம் ஜனவரி 21முதல் 23 வரை பிரான்சின் லூர்து நகரில் நடைபெறும் வேளை, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அனுப்பியுள்ள தனது செய்தியில் ஒப்புரவையும் அமைதியையும் ஊக்குவிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிளவுபட்ட மற்றும் கடுமையான கருத்து வேறுபாடுகள் நிறைந்த உலகில், குறிப்பாக, செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமைதி மற்றும் ஒப்புரவிற்காக உழைப்பவர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கத்தோலிக்க ஊடக பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜனவரி 21 முதல் 23 வரை பிரான்சின் லூர்து நகரில் நடைபெறும் சலேசு நகர்ப் புனித பிரான்சிஸ் தினங்களின் 29-வது பதிப்பிற்காகக் கூடியுள்ள பிரெஞ்சு கத்தோலிக்க ஊடக கூட்டமைப்புக்கு ஜனவரி 21, புதன்கிழமையன்று அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

தனது செய்தியில் துன்பப்படுபவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் உள்ளவர்களுக்கு இடம் கொடுக்கவும், வெறுப்பு மற்றும் தீவிரவாத மனப்பான்மையை அகற்ற உதவவும் செய்தித் தொடர்பாளர்களை ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை.

சமூக, அரசியல் மற்றும் மத வாழ்க்கையில் மனிதநேயம், புரிந்துணர்வு மற்றும் ஆழ்ந்த தார்மீகப் பண்பை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, "கத்தோலிக்க ஊடகங்கள் நம்பகத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும்" என்றும், "நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளாத மக்களுடன் கூட அர்த்தமுள்ள மனித உறவுகளை உருவாக்க வேண்டும்" என்றும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு அருள்பணியாளர் ஜாக் ஹேமல் அவர்களை பத்திரிகையாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, ஹேமலின் உரையாடல் மற்றும் மற்றவர்களுடன் நெருக்கம் ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளதுடன், அமைதி மற்றும் மதங்களுக்கு இடையேயான புரிதலை ஊக்குவிக்கும் அவரது நினைவாக பெயரிடப்பட்ட ஒரு பத்திரிகை விருதையும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, "பத்திரிகையாளர்கள் உண்மையைத் தேடுபவர்களாகவும், உடைந்துபோன மனிதகுலத்தை குணப்படுத்த உதவும் தொடர்பாளர்களாகவும் இருக்க வேண்டும்" என்று விண்ணப்பித்து தனது உரையை நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜனவரி 2026, 12:22