தேடுதல்

மே 10, 2025 அன்று கர்தினால்களைச் சந்தித்த திருத்தந்தை மே 10, 2025 அன்று கர்தினால்களைச் சந்தித்த திருத்தந்தை  (ANSA)

திருத்தந்தையின் முதல் கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டம்

திருஅவையின் எதிர்காலத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேறிச் செல்லும் திருத்தந்தை லியோ அவர்கள், தனது பதவிக்காலத்தில் இடம்பெறும் இந்தக் கூட்டம் ஒரு முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தனது முதல் கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தை நடத்த உள்ளார். இது ஜனவரி 7, புதன்கிழமை மற்றும் ஜனவரி 8, வியாழக்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு நாள் நடைபெறும் இந்த நிகழ்வில், புதிய திருத்தந்தை பதவியில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கும் வகையில், திருஅவை எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கர்தினால்கள் அவை உறுப்பினர்கள் ஒன்றுகூடுகிறார்கள்.

இந்தக் கர்தினால்கள் ஆலோசனை அவைக்கூட்டம் ஜனவரி 7, புதன்கிழமை மாலை 4:00 மணிக்கு வத்திக்கானில் உள்ள ஆயர் மாமன்ற அரங்கில் தொடங்கும். அங்கு மூடிய கதவுகளுக்குப் பின்னால் அதன் செயற்பாடுகள் இடம்பெறும்.

"நற்செய்தியின் மகிழ்ச்சி" (Evangelii Gaudium) என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது மடலில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள திருஅவையின் மறைபரப்புத் தன்மை, திருத்தூது அமைப்புவிதித் தொகுப்பு (Praedicate Evangelium), வத்திக்கான் தலைமை அலுவலகத்தின் பங்கு மற்றும் குறிப்பிட்ட திருச்சபைகளுடனான அதன் உறவு, ஒன்றிணைந்த பயணத்தின் (synodality) முக்கியத்துவம் மற்றும் வழிபாட்டு முறையின் எதிர்காலம் ஆகியவை கலந்துரையாடலுக்கான தலைப்புகளில் அடங்கும்.

கடந்த 2025-ஆம் ஆண்டு புதிய திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், உலகளாவியத் திருஅவையின் நிர்வாகத்தில் கர்தினால்களுக்கு வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் வழங்குவதன் மூலம், பகிரப்பட்ட தெளிந்து தேர்தலை நாடும் விவாதங்களுக்கு தலைமை தாங்குவார்.

இந்த வாரத் தொடக்கத்தில் இடம்பெற்ற திருஅவை ஒன்றிப்பு மற்றும் பணி குறித்த தொடர்ச்சியான பிரதிபலிப்பை எடுத்துக்காட்டும் வகையில், புனித கதவு மூடல் மற்றும் திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலியில் கலந்து கொண்ட பல கர்தினால்கள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

ஜனவரி 8, வியாழக்கிழமை, காலை 7:30 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலியைச் சிறப்பிப்பார். காலை அமர்வு காலை 9:30 மணிக்குத் தொடங்கி மதியம் 12:45 மணி வரை தொடரும், அதைத் தொடர்ந்து பிற்பகல் 3:15 மணி முதல் மாலை 7:00 மணி வரை பிற்பகல் அமர்வு நடைபெறும்.

திருஅவையின் எதிர்காலத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேறிச் செல்லும் திருத்தந்தை லியோ அவர்கள், தனது பதவிக்காலத்தில் இடம்பெறும் இந்தக் கூட்டம் ஒரு முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது. இது வரும் ஆண்டுகளில் அவர் பின்பற்றுவதாக உறுதியளித்த ஒன்றிணைந்த பயணத்தின் பாதைக்கு (synodal path) அடித்தளம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜனவரி 2026, 14:39